மகரம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை
நிதானத்தோடு செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே ராசிநாதன் சனி சஞ்சரிக்கிறார். ஆனால் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கியக் குறைவு உருவாகலாம். அமைதியான வாழ்க்கையில் மற்றவர்களின் குறுக்கீடுகள் வந்து மனக்கலக்கத்தை உருவாக்கும். காரிய தாமதங்களும், கடன்சுமை அதிகரிப்பும் ஏற்படும் மாதம் இது. விலகிய ஏழரைச் சனி மீண்டும் வக்ர இயக்கத்தில் வந்திருப்பதால் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய மாதம் இது.
புதன் வக்ரம்
புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. 'கடன் சுமை கூடுகிறதே' என்று கவலைப்படுவீர்கள். இடமாற்றம், வீடுமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். 9-க்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால் இந்த வக்ர காலத்தில் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் சில பிரச்சினைகள் உண்டு.புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொழில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேர்ந்து பொருளாதார நிலை உயர வழிவகுக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. 'வாங்கிய இடத்தில் வீடு கட்ட எப்பொழுது நல்ல நேரம் வரும்' என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. சனியின் வக்ரம் நிவர்த்தியான பிறகு எதையும் துணிந்து செய்ய இயலும்.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதி புதன் 10-ம் இடத்திற்கு வரும்பொழுது தொழில் முன்னேற்றம் உண்டு. தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன்தரும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறவிருக்கும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவைப்பீர்கள். சேமிப்பு உயரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமை பளிச்சிடும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ- மாணவிகளுக்குக் கல்வி தொடர்பான பயணங்கள் உண்டு. பெண்களுக்கு சுபவிரயங்கள் அதிகரிக்கும். பொருளாதாரம் சகஜ நிலைக்கு வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 20, 21, 27, 28, அக்டோபர்: 1, 2, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.