மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை
அன்பு ஒன்றே மூலதனம் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சொல்ல முடியாத அளவிற்கு துயரங்களைச் சந்தித்து இருக்கலாம். பங்குனி 14-ந் தேதி வரை ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருக்கின்றது. ஏனெனில் இடையில் 6 மாதம் சனி பகவான் கும்ப ராசிக்கு சென்று மீண்டும் மகரத்திற்குத் திரும்புகிறார். அவர் கும்பத்தில் இருக்கும் 6 மாதமும் பெரியளவில் பாதிப்புகளைத் தரமாட்டார்.
இருப்பினும் மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் கொஞ்சம் விழிப்புணர்ச்சி தேவை. மந்தன் எனப்படும் சனி மந்த கதியில் இயங்குவார் என்பார்கள். எனவே பல காரியங்கள் துரித கதியில் நடைபெறாமல் மந்த கதியிலேயே நடைபெறும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அமைதி கிடைக்க அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதே நல்லது.
மேஷ - புதன்
பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்திற்கு செல்கிறார். இக்காலம் இதயத்தை மகிழ்விக்கும் காலமாகும். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும். உறவினர்கள் உற்ற துணையாக விளங்குவர். வரவு அதிகரிக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வீடு வாங்கும் யோகம் உண்டு. விருப்பம் போல வீட்டைப் பழுது பார்க்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். கையில் இருந்த பணம் கரைந்தாலும் பையில் பணம் இருந்து கொண்டேஇருக்கும் விதத்தில் புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். தூரத்து ஊர்களுக்கு மாற்றலாகிச் சென்று துணிந்து பணிபுரிய முற்படுவீர்கள்.
ரிஷப - சுக்ரன்
பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கே செல்வதால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். அதிகச் செலவில்லாமலேயே சில காரியங்கள் முடிவடைதல், ஆதாயம் தரும் தகவல்களை அன்றாடம் கேட்டல் போன்றவை நடைபெறும் நேரமிது. பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட சோதனைகள் மாறும். மேலிடத்து ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள், நவீன யுக்திகளைப் பயன்படுத்தி முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வீர்கள். பணியாளர் மாற்றம் பலன் தரும். கலைஞர்களுக்கு இடையூறுகள் அகன்று இனிய பலன் கிடைக்கும். மாணவ - மாணவிகள், தங்களின் பெற்றோர், ஆசிரியர் சொற்கேட்டு நடப்பதன் மூலம் கற்ற கல்வியால் பெருமை சேரும். பெண்கள் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய நேரம் இது. சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். இல்லறம் நல்லறமாக, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 20, 21, 24, 25, ஏப்ரல்: 4, 5, 6, 9, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்நீலம்.