மகரம் - தமிழ் மாத ஜோதிடம்


மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை

முயற்சி அனைத்தையும் முடித்துக் காட்டும் மகர ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெற்று சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இருப்பினும் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றும்.

துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானம் என்னும் 10-ம் இடத்திற்கு ஐப்பசி 2-ந் தேதி செல்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானப் பற்றாக்குறை அகன்று, வசதி வாய்ப்புகள் பெருகும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்கும் சூழ்நிலை உருவாகும். பெண் பிள்ளைகளின் திருமணம் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும்.

துலாம் - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். 6-க்கு அதிபதி 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் உண்டு. சில காரியங்களை உடனுக்குடன் முடித்துக் காட்டுவீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், சலுகைகளும் கிடைக்கும்.

மிதுன - செவ்வாய் வக்ரம்

ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். அதுமட்டுமின்றி செவ்வாயின் பார்வையும் மகரத்தில் உள்ள சனி மீது பதிகிறது. எனவே அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது. நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். உடன்பிறப்புகளும் உடன் இருப்பவர்களும் உதவி செய்வதாகச் சொல்லி, கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.

விருச்சிக - புதன் சஞ்சாரம்

ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வரலாம். ஆயினும் ஏழரைச் சனியும், ஜென்மச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுவதால் எதையும் ஏற்றுக் கொள்ள இயலாமல் இடையூறுகள் வந்து சேரும். சனிக்குரிய பரிகாரம் செய்வது நல்லது.

விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும் நேரம் இது.

குரு வக்ர நிவர்த்தி

உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகி, பலம் பெறுகிறார். வெற்றிகள் ஸ்தானம் பலம்பெறும் போது, உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பார்த்தபடி தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு தற்காலிகப் பணி, நிரந்தரமாக மாறும். தடைகள் அகலும். உடன்பிறப்புகளின் ஆதரவு கூடுதலாக இருக்கும்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 24, 25, 28, 29, நவம்பர்: 2, 3, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் வலுவாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். சொத்துக்களால் பிரச்சினைகள் வரக்கூடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் அதிகரிக்கும். பிரச்சினைகளை அதிகம் வளரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த விதத்தில் இடமாற்றங்கள் ஏற்பட்டு மன அமைதி கிடைக்கும்.


Next Story