கடகம் - தமிழ் மாத ஜோதிடம்


கடகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 13 Feb 2023 10:18 AM IST (Updated: 13 Feb 2023 10:21 AM IST)
t-max-icont-min-icon

மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை

நல்லது செய்ய வேண்டுமென்று நினைக்கும் கடக ராசி நேயர்களே!

மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சனியோடு இணைந்து புதன் சஞ்சரிக்கிறார். 3, 12-க்கு அதிபதியான புதன் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது பயணங்கள் அதி கரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். உடன்பிறப்புகளின் வழியில் ஒரு நல்ல காரியம் நடைபெறும். குருவின் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிவதால் ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

உச்ச சுக்ரன் சஞ்சாரம்

மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெறும்பொழுது புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவோடு பெருமைக்குரிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தற்போது இருக்கும் நிறுவனத்தில் இருந்தே, ஒருசில மாதங்கள் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்ப - புதன் சஞ்சாரம்

மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், அஷ்டமத்தில் மறைவது யோகம்தான். 12-க்கு அதிபதி 8-ல் மறைவதால் திடீர் பயணங்களும், அதனால் ஆதாயங்களும் உண்டு. சகோதர வழியில் ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுப காரியங்களை முன்நின்று நடத்தி வைப்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.

மீன - புதன் சஞ்சாரம்

மார்ச் 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். 12-க்கு அதிபதி நீச்சம்பெறுவது யோகம்தான். விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டேயிருக்கும். வீடு மாற்றம் உறுதியாகலாம். வழக்குகள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டி வெற்றி காண்பீர்கள்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 10-ம் இடத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். அதற்குத் தேவையான முதலீடுகளை வழங்க, நண்பர்கள் உதவியாக இருப்பர். இடம் வாங்கி மனை கட்டும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உறவினர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை காத்திருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. கண்டகச் சனியின் ஆதிக்கம் நடைபெறும் அதே நேரத்தில், செவ்வாயின் பார்வை சனியின் மீதும் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. வீண் விரயங்கள் அதிகரிக்கும். மன அமைதி குறையும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

பிப்ரவரி: 13, 23, 24, 27, 28, மார்ச்: 6, 7, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. மருத்துவச் செலவுகளும், மனக் கவலையும் அதிகரிக்கும். வருத்தங்கள் குறைய வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்றால், உங்களுக்கு அதில் ஈடுபாடு இருக்காது. கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலை ஒருசிலருக்கு ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் திடீர் இடமாற்றம் வந்து மனக்கவலையை அதிகரிக்கும்.


Next Story