மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்
ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை
யாரையும் சந்தித்தவுடன் நண்பர்களாக்கிக் கொள்ளும் மேஷ ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், விரயாதிபதி குருவுடன் இணைந்து விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே எதிர்பாராத விரயம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
ரிஷப - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் இடமான தன ஸ்தானத்தில் உலா வரும்பொழுது, நல்ல யோகங்களைக் கொடுப்பார். குறிப்பாக குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
மிதுன - புதன் சஞ்சாரம்
ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகோதர, சகாய ஸ்தானாதிபதியான அவர், அதற்குரிய வீட்டிலேயே சஞ்சரிக்கும் வேளையில் உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும். அவர்களின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். உடன்பிறந்தவர்களின் உத்தியோகத்தில், பணி நிரந்தரமாகலாம்.
மேஷ - செவ்வாய் சஞ்சாரம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய், ஆனி 12-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். இது ஒரு பொற்காலமாகும். இதுவரை சனியின் பார்வையில் சிக்கியிருந்த செவ்வாய், இப்பொழுது விடுபடுவதால் எதிர்பார்த்த நல்ல திருப்பங்கள் வந்து சேரும். இடையூறு சக்திகள் அகலும். கட்டிடப் பணியில் இருந்த தொய்வு மாறும். பொதுவாக ராசிநாதன் பலம் பெற்றிருக்கும் இந்த நேரத்தில், ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
கடக - புதன் சஞ்சாரம்
ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தாய், வாகனம், கல்வி, சுகம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கு வருகிறார். அந்த இடங்களில் உள்ள தடைகள் மறையும். தாய்வழி பிரச்சினைகள் நீங்கும். வாகனம் வாங்க, கட்டிடம் கட்ட, உத்தியோகத்தில் சலுகை கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும். கைவசம் இருந்த நிலம், மதிப்புமிக்கதாக மாறும்.
மிதுன - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு பஞ்சமாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். தனாதிபதியும், பஞ்சமாதிபதியும் இணையும் போது, தனவரவு தாராளமாகும். பிள்ளைகளுக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து, பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும்.
இம்மாதம் சிவபுராணம் படிப்பதோடு நடராஜர் வழிபாட்டையும் நம்பிக்கையோடு செய்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 15, 16, 20, 21, 26, 27, ஜூலை: 1, 2, 12, 13, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி, ஆனி மாதம் 11-ந் தேதிக்கு மேல் நடைபெறும். மாதத் தொடக்கத்தில் சனி, செவ்வாய் பார்வை இருப்பதால், கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவதோடு கல்யாண முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லைகள் அதிகரிக்கும்.