மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்


மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை

எல்லோரிடமும் சரளமாகப் பேசும் மேஷ ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் மிதுனத்தில் சஞ்சரித்து மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். பகைக் கிரகங்களின் பார்வை இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் குறைய வேண்டுமானால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அசதி ஏற்படாமல் இருக்க ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தனாதிபதி சுக்ரன், உங்கள் ராசியிலேயே இருப்பதால் பொருளாதார நிலை திருப்தியளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக விளங்குபவர் சனி. அவர் மீது செவ்வாயின் பார்வை பதியும் பொழுது தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். தொழிலில் போட்ட முதலீட்டை எடுப்பது பற்றி யோசிப்பீர்கள். லாபம் வருவதற்கு புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். ஒருசிலர் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் சூழ்நிலை ஏற்படலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள், ஆதாயத்தை பெறுவது என்பது அரிதுதான். பங்குதாரர்களின் அச்சுறுத்தல் கூடும். அவர்களே தொழிலை நடத்துவதாகச் சொல்லி உங்களுக் குரிய பங்குத் தொகையைக் கொடுப்பதாகவும் ஏற்பாடு களைச் செய்வர். மனக்குழப்பம் கூடும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் அனுசரிப்பு குறையும். கொடுக்கப்பட்ட பொறுப்பை திருப்திகரமாக முடிக்க இயலாது.

மேஷ - புதன்

பங்குனி 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். வெற்றிகளின் ஸ்தானாதிபதியாக புதன் விளங்குவதால் வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். சுற்றத்தார் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பிக்க நினைக்கலாம். சகோதர வர்க்கத்தினர் உங்களோடு இணைந்து செயல்பட முன்வருவர். பாகப்பிரிவினைகள் கூட சுமுகமாக முடியும்.

ரிஷப - சுக்ரன்

உங்கள் ராசிக்கு தனாதிபதியான சுக்ரன், பங்குனி 24-ந் தேதி தன ஸ்தானமான ரிஷபத்திற்குச் செல்கிறார். இதனால் பற்றாக்குறை பட்ஜெட் மாறும். மிதமிஞ்சிய பொருளாதாரம் வந்துசேரும். தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உங்கள் கை மேலோங்கும். தொழில்புரிபவர்கள் விரிவாக்கம் செய்ய எடுத்த முயற்சி பலன்தரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள் மட்டுமல்லாமல், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு சென்ற மாதத்தைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர். மாணவ - மாணவியர்கள், படிப்பில் ஆர்வம் காட்டினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். பெண்களுக்கு உடல்நலம் சீராகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும்.

இம்மாதம் வள்ளி - தெய்வானை உடனாய முருகப் பெருமானை வழிபட்டால் வளர்ச்சி உண்டாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 15, 16, 20, 21, 26, 27, 31, ஏப்ரல்: 1, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.


Next Story