மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்
தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை
எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற மேஷ ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் ராகுவும், 7-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். ராசிநாதன் செவ்வாய், தன ஸ்தானத்திலும், விரயாதிபதி குரு விரய ஸ்தானத்திலும் பலம் பெற்றிருக்கிறார்கள். எனவே இம்மாதம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
மாதத் தொடக்கத்தில் ஜென்மத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். எனவே சர்ப்பக்கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. வீழ்ச்சியும், எழுச்சியும் கலந்துவரும் நேரம் இது. வரவும், செலவும் சமநிலையில் இருக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். இரவு பகலாகப் பாடுபட்டாலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. வாழ்க்கைத் துணை வழியே கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
2-ல் ராசிநாதன் செவ்வாய் இருப்பதால் வாக்கு ஸ்தானம் பலப்படுகிறது. கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். 9-ம் இடத்தில் புதனும், 10-ம் இடத்தில் சூரியன், சனி, சுக்ரனும், 12-ம் இடத்தில் குருவும் சஞ்சரிப்பதால், தந்தை வழி உறவில் விரிசல்கள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். மாமன், மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும்.
சூரியன் - சனி சேர்க்கை
பொதுவாகவே பகைக் கிரகங்களின் சேர்க்கை ஏற்படும் பொழுதெல்லாம், நாம் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் இம்மாதம் சூரியனோடு, சனி சேர்க்கை ஏற்படுகிறது. ஜீவன ஸ்தானத்தில் இரண்டும் இணைந்து சஞ்சரிக்கும் பொழுது தொழிலில் திட்டமிட்டபடியே லாபம் வந்தாலும், அதைச் சேமிக்க இயலாமல் போகலாம். வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலாக இருந்தால், அதை திடீரென மாற்றம் செய்யச் சொல்லி உரிமையாளர்கள் வற்புறுத்துவர். பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பர். அதன் விளைவாக மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தை தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. ஒரு சிலருக்கு வீடுமாற்றம், இடமாற்றம் ஏற்படலாம்.
கும்ப - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். தனாதிபதியான சுக்ரன் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். வெளிநாட்டில் பணிபுரிய ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். அதிகாரிகளின் ஆதரவோடு உத்தியோகத்தில் உயர் நிலையடைய சந்தர்ப்பங்கள் கைகூடி வரலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
மகர - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்புடன் கடன்சுமை குறைய வழிபிறக்கும். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். தள்ளிப்போன சுபகாரியப் பேச்சுக்கள் திடீரென முடிவாகும்.
இம்மாதம் முழுவதும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வந்தால் துயரங்கள் விலகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 19, 20, 24, 25, 30, 31, பிப்ரவரி: 5, 6.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.