மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்


மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 18 Sept 2022 2:25 AM IST (Updated: 18 Sept 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை

உழைப்பின் மூலமே உன்னத வாழ்வை அடைய முடியுமென்று சொல்லும் மேஷ ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்திலும், விரயாதிபதி குரு விரய ஸ்தானத்திலும் இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்துசேரும்.

கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் அவர், அங்கு நீச்சம் பெறுகிறார். சுக்ரன் வலிமை இழப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்போடு செயல்பட முடியாது. இந்த காலகட்டத்தில் விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம். எடுக்கும் புது முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். இருப்பினும் நீச்சம் பெற்ற சுக்ரன் மீது, மீனத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கும் குருவின் பார்வை பதிகிறது. எனவே கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடி விடும். குருவிற்கான பரிகாரங்களைச் செய்யுங்கள்.

கன்னி - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்கிறார். அது அவருக்கு உச்ச வீடு. விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். கடன் சுமை குறையும். உற்றார், உறவினர்கள் உங்கள் மீது சுமத்திய வீண்பழி அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். 'பலமுறை முயற்சித்தும் வேலை கிடைக்க வில்லையே' என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு, நல்ல வேலை அமையும். கொடுக்கல்- வாங்கல்களை ஒழுங்கு செய்வீர்கள்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் மற்றும் அஷ்டமாதிபதியாக விளங்கும் செவ்வாய் 3-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் உங்களுக்கு வழிகாட்டுவர். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களின் பழக்கம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகலாம். அதே நேரத்தில் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகிறது. பெரிய பாதிப்புகள் இருக்காது. நினைத்தது நிறைவேறாவிட்டாலும் நடப்பது நன்மையாகவே அமையும்.

சனி வக்ர நிவர்த்தி

புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாபாதிபதியாக விளங்கும் சனி, வக்ர நிவர்த்தியாகி பலம் பெறுவதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணி நிமித்தமாக பிரிந்திருந்த கணவன்-மனைவிக்கு, ஒரே இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு உருவாகும்.

இம்மாதம் நவராத்திரி நாட்களில் பராசக்தியை வழிபட்டால் நற்பலன்களை அதிகம் பெறலாம்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 20, அக்டோபர்: 3, 4, 9, 10, 15, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாத முற்பகுதியைக் காட்டிலும் பிற்பகுதியில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவுகளை மேற்கொள்வீர்கள். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் படிப்பிற்கேற்ற வேலையும், எதிர்பார்த்த ஊதியமும் கிடைக்கும். சனியின் வக்ர நிவர்த்தி வரை பொறுமையாக இருப்பது நல்லது. ஊதிய உயர்வு வருவதில் இருந்த தாமதம் அகலும்.


Next Story