மேஷம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு


மேஷம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

14.4.2023 முதல் 13.4.2024 வரை

(அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள் சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

வளர்ச்சி கூடும்!

சமயோசித புத்தியால் சாதனை நிகழ்த்தும் மேஷ ராசி நேயர்களே!

துணிவும், பணிவும் மிக்க உங்களுக்குத் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும் விதத்தில் சோபகிருது புத்தாண்டு அமையப் போகின்றது. புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வெற்றிகள் ஸ்தானத்தில் வீற்றிருக்கின்றார். உங்கள் ராசியிலேயே ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். விரய ஸ்தானத்தில் வியாழன், லாப ஸ்தானத்தில் சனி, தன ஸ்தானத்தில் சுக்ரன் ஆகியவை சொந்த வீட்டில் சஞ்சரித்து ஆண்டின் தொடக்கம் அமைவதால் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும்.

விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் வியாழன், 22.4.2023 அன்று உங்கள் ராசிக்கு வருகின்றார். இடையில் வக்ரமும் பெறுகின்றார். சனி பகவான் வருடத் தொடக்கத்தில் கும்ப ராசியில் சஞ்சரிக்கின்றார். இடையில் கும்பத்தில் வக்ரம் பெறும் அவர், 24.8.2023-ல் வக்ர இயக்கத்திலேயே மகர ராசிக்குச் செல்கிறார். அங்கிருந்து 20.12.2023-ல் மீண்டும் கும்ப ராசிக்கு சனிப் பெயர்ச்சியாகின்றார். இடையில் சனி-செவ்வாய் பார்வையும் ஏற்படுகின்றது.

முரண்பாடான கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை உருவானால் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் வரம் தரும் தெய்வ வழிபாடுகளும், அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லும் போக்குமே அமைதிக்கு வித்திடும்.

8.10.2023-ல் மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கின்றனர். இந்த மாற்றங்களின் அடிப்படையில் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குப் பலன்கள் அமையும்.

உங்கள் சுய ஜாதகத்தில் வலிமை வாய்ந்த திசாபுத்திகள் நடைபெற்றால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். உத்தியோகத்தில் இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். உன்னத வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் விதத்தில் பொருளாதாரம் வந்து சேரும். திசாபுத்தி பலம் இழந்திருந்தால் திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். அப்படிப்பட்ட நிலை அமைந்தால் தேர் ஏறிப் பவனிவரும் தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டால் இன்னல்கள் நீங்கி இன்பம் சேரும்.

குருப்பெயர்ச்சி!

சித்திரை 9-ந் தேதி (22.4.2023) அன்று மேஷ ராசிக்கு குரு, பெயர்ச்சியாகின்றார். அப்பொழுது அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம், பிதுர்ரார்ஜித ஸ்தானம், பயண ஸ்தானம் போன்றவை பலம் பெறுகின்றன. இதனால், காதுகுத்து விழா முதல், கல்யாணம், கட்டிடத் திறப்பு விழா எல்லாம் படிப்படியாக நடைபெறலாம். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். மகத்தான பதவி கிடைக்கும். இதுவரை சிக்கனத்தைக் கையாண்ட உங்கள் கரங்களில் தேவையான அளவு பணம் புரளும். 'பிள்ளைப்பேறு கிட்டவில்லையே' என்று கவலைப்பட்ட தம்பதியர்களுக்கு பிள்ளைப்பேறு கிடைக்கும். 'கல்யாண வயது வந்தும் கல்யாணம் கைகூடவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு வியாழநோக்கம் செயல்பட்டு விரைவில் திருமணம் கைகூடும்.

புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புனிதப் பயணம் அதிகரிக்கும். அதிக முயற்சி செய்தும், இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது அடுக்கடுக்காக நடைபெறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரலாம். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கூட மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும்.

கும்பச்சனி!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். '11-ம் இடத்துச் சனி, பண வரவு தான் இனி' என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகொடுக்கும்.

இதுவரை நடைபெற்ற தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சென்ற ஆண்டில் கைநழுவிச் சென்ற புதிய ஒப்பந்தங்கள் இப்பொழுது முயற்சி எடுக்காமலேயே வந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கூட்டுத்தொழிலில் இதுவரை தொல்லை கொடுத்து வந்த பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் புதியவர்களை பங்குதாரர்களாக அமைத்துக்கொள்ள முன்வருவீர்கள். செய்தொழில் எதுவாக இருந்தாலும் செழிப்பாக அமையும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் உன்னத நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். பணிச்சுமை அதிகரித்தாலும், அதற்கேற்ப ஊதிய உயர்வும் உண்டு. வெளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா? என்று யோசிப்பீர்கள்.

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரம் பெறுகிறார். 24.8.2023 முதல் மகரத்திற்கு வந்தும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கின்றார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்குச் செல்கின்றார். இந்த காலகட்டத்தில் தொழிலில் அதிக முதலீடுகள் செய்து பணத்தை முடக்க வேண்டாம். கூட்டுத்தொழிலில் நிதானம் தேவை. கூட்டாளிகள் காட்டும் அன்பில் மாற்றம் காண நேரிடும். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு குறையும். 'சலுகைகளைப் பெற முடியவில்லையே' என்று சங்கடப்படுவீர்கள். உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் எடுத்துரைப்பதன் மூலம் அதில் தடைகள் ஏற்படலாம். வரவேண்டிய ஒப்பந்தங்கள் வேறு நிறுவனங்களைச் சென்றடையும். தொழில் கூட்டாளிகள் விலகிச் செல்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர்.

ராகு-கேது பெயர்ச்சி!

8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். 12-ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கப் போவதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தூர தேசத்தில் இருந்து உத்தியோகம் சம்பந்தப்பட்ட அழைப்புகள் வரலாம். வரும் வாய்ப்புகளை ஆராய்ந்து அறிந்து ஏற்றுக்கொள்வது நல்லது. சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்வதன் மூலம் சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

வீடுகட்டுவது, கட்டிய வீட்டை பழுது பார்ப்பது, பிள்ளை களின் கல்யாண நலன் கருதிச் செலவிடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரமிது. வருமானப் பற்றாக்குறை அகலும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அடிக்கடி ஆரோக்கியத் தொல்லை வரலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள்.

வளர்ச்சி தரும் வழிபாடு!

புத்தாண்டு முழுவதும் பொன் கொழிக்கும் ஆண்டாக அமைய விநாயகர் கவசம் பாடி ஆனைமுகனை வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட்டு அற்புதமான பலன்களைக் காணுங்கள்.

பெண்களுக்கான பலன்கள்!

புத்தாண்டில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வருடத் தொடக்கத்தில் இருந்தே வளர்ச்சி அதிகரிக்கும். நீண்டகாலமாக தொல்லை கொடுத்து வந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். உடல்நலத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் உடனுக்குடன் சீராகும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் கருத்தொருமித்த வாழ்க்கையால் நிம்மதி கிடைக்கும். ராகு- கேது பெயர்ச்சிக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளோடு சம்பள உயர்வும் கிடைக்கும்.

குரு-சனி வக்ரம்!

12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும். வளர்ச்சி வரும்போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள். தளர்ச்சி வரும் பொழுது தக்கவிதத்தில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கூட்டு முயற்சியில் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். பயணயங்களால் பலன் உண்டு. புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், பிறகு 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி வக்ரம் பெறுகின்றார். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மிகமிக கவனம் தேவை. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் புரிபவர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும்.


Next Story