கும்பம் - ஆண்டு பலன் - 2022
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)
பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்
கும்ப ராசி நேயர்களே!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். வருடத் தொடக்கத்தில், தன லாபாதிபதியான குருபகவான் உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு தன ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே இந்த ஆண்டு முழுவதும் பணப் பற்றாக்குறை அகலும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வழிபிறக்கும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் விரயங்களும் உண்டு.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். நீங்கள் ஒரு மடங்கு செலவிட நினைத்தால் இருமடங்கு செலவாகலாம். இருப்பினும் வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வீடுமாற்றம், இடமாற்றம், வாகன மாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடியே நடைபெறும்.
'புத சுக்ர யோக'மும், 'சந்திர மங்கள யோக'மும் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படுகிறது. எனவே ஆடை, ஆபரண சேர்க்கை, இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு போன்றவை ஏற்படலாம். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்போடு கேட்ட சலுகைகள் கிடைக்கும். ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தில் அனைத்துக் கிரகங்களும் இருப்பதால் வருடத் தொடக்கத்தில் சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது.
கும்ப குருவின் சஞ்சாரம்
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வையானது, உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே பூர்வ, புண்ணிய ஸ்தானம் பலம்பெறுகிறது. நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கல்யாண முயற்சிகள் கைகூடலாம். சுபச் செய்திகளை நண்பர்கள் கொண்டு வந்து சேர்ப்பர். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். தனித்து இயங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர்.
ராகு-கேது பெயர்ச்சி
21.3.2022 அன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். சகாய ஸ்தானத்திற்கு ராகு வருவதால் ஒருசில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கருத்து வேறுபாடுகள் அகலும். பரம்பரை சொத்துக்களில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு முறையாகக் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதலும் உண்டு. பாக்கிய ஸ்தானம் பலப்படுவதால் முன்னோர்கள் கட்டிவைத்து சிதிலமடைந்த கோவில்களைப் பராமரிக்கும் முயற்சி கைகூடும்.
குருப்பெயர்ச்சி
13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அது குருவிற்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிப்படி தனாதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், அற்புதமான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வருமானம் திருப்தி தரும். இந்த நேரத்தில் வாங்கல் - கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து கூடுதல் சம்பளம் தருவதாக அழைப்புகள் வரலாம். திசாபுத்தி பலம் பெற்றவர்கள், அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பெயர்ச்சியாகும் குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் உத்தியோக முயற்சியில் பலன் கிடைக்கும். உறவினர் பகை மாறும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்
25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல் நலத்திற்காக ஒரு தொகையைச் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். திடீர் இடமாற்றங்கள் ஏற்பட்டு மனக்கவலை அளிக்கலாம். உங்கள் ராசிக்கு விரயாதிபதியாகவும் சனி இருப்பதால் அதிக விரயங்களைச் சந்திக்க நேரிடும்.
8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியான குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். வாங்கல் - கொடுக்கல்களில் மிகுந்த கவனம் தேவைப்படும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்தப் புத்தாண்டின் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் அனுமனை வழிபடுவதோடு, பைரவரையும் வணங்குங்கள்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் விரயச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். வீடு மாற்றங்கள் விரும்பிய விதம் அமையும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. செலவிற்கேற்ற வரவு வரும் ஆண்டு இது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி - செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகிறது. இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிநாதனாக விளங்கும் சனியும், சகாய ஸ்தானாதிபதியாக விளங்கும் செவ்வாயும் சம்பந்தப்படுவதால் பல காரியங்கள் தடையாகவே இருக்கும். ஆரோக்கியத் தொல்லை ஒரு புறம், அதிக கடன் சுமை மற்றொரு புறம் என்ற நிலை உருவாகும். பொது வாழ்வில் உள்ளவர்கள், வீண் பழிக்கு ஆளாக நேரிடலாம். எனவே அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.