கும்பம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் -சோப கிருத ஆண்டு


கும்பம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் -சோப கிருத ஆண்டு
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

14.4.2023 முதல் 13.4.2024 வரை

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

யோசித்து செயல்படுவது நல்லது!

செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

வரவறிந்து செலவு செய்ய வேண்டுமென்று சொல்லும் உங்களுக்கு இந்த சோபகிருது புத்தாண்டின் தொடக்கமே ஜென்மச் சனியாக அமைகின்றது. அதே நேரம் தனாதிபதி குரு, தன ஸ்தானத்திலேயே வலிமை பெற்றிருக்கின்றார். எனவே எண்ணங்கள் எளிதில் நடைபெறும். சிறுசிறு பிரச்சினைகளும். மனக்கிலேசங்களும் இடையிடையே ஏற்படத்தான் செய்யும். தைரியமும், தன்னம்பிக்கையும் தக்க விதத்தில் உங்களுக்கு உறுதுணைபுரியும்.

ஏப்ரல் 22-ந் தேதி குரு பகவான் மேஷ ராசிக்கு செல்கின்றார். சகாய ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது ஜென்மச் சனியால் ஏற்படும் சிக்கல்களுக்கு விடிவு காலம் பிறக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானப் பற்றாக்குறை அகல புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வருடத் தொடக்கத்தில் உள்ள கிரக நிலைகளைப் பார்க்கும் பொழுது 3-ல் ராகுவும், 9-ல் கேதுவும் இருக்கின்றார்கள். எனவே உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையலாம். ஊா் மாற்றம் மற்றும் உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடியே அமையலாம். பொதுவாழ்வில் உள்ளவர்கள் மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது.

புத்தாண்டில் 3 முறை சனி, செவ்வாயின் பார்வை ஏற்படுகின்றது. அப்பொழுது கட்டுக்கடங்காத விரயங்கள் ஏற்பட்டு கவலையைக் கொடுக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உடல்நலத்திற்கென்று ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலையும் உண்டு. 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகு செல்கின்றார். அதே நேரம் கன்னி ராசிக்கு கேது வருகின்றார். இந்த மாற்றங்களின் அடிப்படையில் தான் பலன்கள் வந்து சேரப்போகின்றது.

இவைகள் பொதுப்பலன்கள் என்பதால் சுய ஜாதகத்தில் திசா புத்திகள் பலம்பெற்று நடைபெற்றால் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். திசாபுத்தி பலம் இழந்திருந்தால் இனத்தார் பகையும், இல்லத்தில் கொந்தளிப்பும் உருவாகும். அப்படிப்பட்டவர்கள் யோகபலம் பெற்ற நாளில் முறையான இறை வழிபாடு செய்வதன் மூலம் வளர்ச்சியைப் பெறலாம்.

குருப்பெயர்ச்சி

சித்திரை 9-ந் தேதி (22.4.2023) அன்று மேஷ ராசிக்கு குரு பகவான் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் நேரம் படிப்படியாக நன்மைகள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களையும் குரு பார்க்கப் போகின்றார். எனவே கல்யாண முயற்சிகள் கைகூடும். விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்திணைவர். பிள்ளைகளின் திருமணங்களை சிறப்பாக நடத்தும் சூழ்நிலை உண்டு. ெவளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வின் காரணமாக வெளியூர் வாய்ப்புகள் வரலாம்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பொன், பொருட்கள் பெருகும். போட்ட திட்டங்கள் நிறைவேறும். அன்பு நண்பர்கள் உங்கள் அருகிருந்து வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் கூட நடப்பது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். பெற்றோர்களால் சகல நன்மைகளும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைப் பிரித்துக் கொள்வதில் இருந்த பிரச்சினைகள் மாறும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறி பாகப்பிரிவினைக்கு சம்மதிப்பர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக்கொண்டு செயல்படுவர்.

லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் வளர்ச்சி திருப்தி தரும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆயினும் ஏழரைச் சனி நடைபெறுவதால் சேமிக்க இயலாது. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் புதியவர்களை நம்பித் தொழிலை விரிவு செய்ய வேண்டாம். அரசு வழிச்சிக்கல்களைச் சந்திக்கும் சூழ்நிலையும் உண்டு.

கும்பச் சனி

கிரகங்களில் வலிமை வாய்ந்த சனி பகவான் உங்கள் ராசிநாதனாகத் திகழ்பவர். அவர் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சிக்கல்களும், சிரமங்களும் திடீர், திடீரென வந்து சேரும். உறவினர் பகை உருவாகி உள்ளத்தை வாட வைக்கும். 'நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் நிம்மதி இருக்காது. பொருளாதாரத்தில் இருந்த சரள நிலை மாறி சரிவை நோக்கி செல்லாமலிருக்க திட்டமிட்டுச் செயல்படுவதோடு தெய்வ வழிபாடும் தேவை.

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி, இடையில் வக்ரமும் பெறுகின்றார். பின்னர் 24.8.2023-ல் மகரத்திற்கு வந்தும் சனி வக்ரம் பெற்று வருகின்றார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்கு முறையாகப் பெயர்ச்சியாகின்றார். இந்த வக்ர காலத்தில் உடல்நலத்தில் கவனம் தேவை. உள்ளத்தில் நல்லதையே நினைத்துக் கவனத்தோடு செயல்படுவது நல்லது. எந்தச் செயலிலும் தாமதம் ஏற்படுமே தவிர கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். காரணம் உங்கள் ராசிநாதனாக விளங்குபவர் சனி பகவான் அல்லவா. அவர் அளவோடு துயரத்தைக் கொடுப்பாரே தவிர, அவரை வழிபட்டால் வளர்ச்சியையும் தருவார். அதே நேரத்தில் அலுவலகப் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. எத்தகைய சம்பவத்திலும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

ராகு-கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு ராகு வருகின்றார். அஷ்டமத்திற்கு கேது வருகின்றார். 2-ல் ராகு வருவதால் பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவம் நடைபெறும். எதிர்காலத்தை இனிமையாக்கிக் கொள்ள புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றத்தைக் காண நேரிடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்துசேர்ப்பர். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் அனுகூலம் உண்டு.

8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அலைச்சல் அதிகரித்தாலும் ஆன்மிகத்திற்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி விரயங்களை சுபவிரயமாக்கிக் கொள்வது நல்லது. 'வாகனங்களை மாற்றலாமா?' என்ற சிந்தனையும், 'புதிய வாகனங்கள் வாங்கலாமா?' என்ற எண்ணமும் உருவாகும். உறவினர்களிடம் பழகும் பொழுது கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாகச் செய்தால் ஏற்ற, இறக்கமில்லாத வாழ்க்கை அமையும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

புத்தாண்டில் புதிய திருப்பங்கள் ஏற்பட செவ்வாய் தோறும் வராஹி அம்மனை வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் தஞ்சை பெரியகோவில் சென்று வராஹி உள்பட சப்த தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் சந்தோஷங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் விரயச்சனி விலகி ஜென்மச்சனியாக நடைபெறுவதால் சென்ற ஆண்டைக் காட்டிலும் விரயம் குறைவாகவே இருக்கும். வருமானம் திருப்தி தரும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலமே புதிய பாதை அமைத்துக் கொள்ள இயலும். சகோதர வர்க்கத்தினர் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் ஏற்படலாம். வீண் விரயங்கள் அகல சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு இனிமை தரும் விதத்தில் இடமாற்றம் வரலாம்.

குரு-சனி வக்ரம்

12.9.2023 முதல் 2012.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். புதியவர்களை நம்பிச்செய்யும் முயற்சிகளில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். வர்த்தக ஒப்பந்தங்களில் யோசித்துக் கையழுத்திடுவது நல்லது. வங்கிக் காசோலைகளை கவனத்தோடு பயன்படுத்த வேண்டும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்து அகலக்கால் வைக்க வேண்டாம்.

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், பிறகு 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் எதிலும் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. மனக்கலக்கம் அதிகரிக்கும். பணிவும், பாசமும் உங்கள் செயல்பாட்டில் இருந்தால் இனிய சூழ்நிலை இல்லத்தில் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புது முயற்சியில் அவசரம் காட்ட வேண்டாம். சனி ராசிநாதனாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


Next Story