தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-08-29 08:31 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

இன்று (29-08-2024) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (30-08-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். மேலும், அதற்கடுத்த இரண்டு தினங்களில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

29.08.2024 மற்றும் 30.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

31.08.2024 முதல் 04.09.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28- 29 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்