2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 21-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்தது. இயல்பைவிட தற்போது வரை 31 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தமிழ்நாட்டில் கோடை காலம் மீண்டும் தொடங்கிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு வெப்பம் சுட்டெரித்து வருகிறது.
இந்த சூழலில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.