கொரோனா காலகட்டத்தில் கேரளாவை சேர்ந்த மாணவன் ஒருவன் விவசாயியாக மாறி விதவிதமான காய்கறிகளை பயிரிட்டிருக்கிறான். கொரோனா ஊரடங்கின்போது கற்றுக்கொண்ட விவசாய பணியை இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.
பள்ளிக்கூடம் சென்றுவிட்டு திரும்பிய பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் விவசாயியாக மாறிவிடுகிறான். அவனுடைய விவசாய ஆர்வத்தை பாராட்டி விவசாய தினத்தன்று 'சிறந்த மாணவர் விவசாயி' என்ற பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
அங்குள்ள பைசன்வேலி பகுதியை சேர்ந்த அந்த 12 வயது சிறுவனின் பெயர் அமித் கே. பிஜு. தற்போது 7-ம் வகுப்பு படித்து வருகிறான். விதைகளை நடுவது முதல் உரம் இட்டு அறுவடை செய்வது வரை எல்லா விவசாய பணிகளையும் தானே முன்னின்று மேற்கொள்கிறான்.
மகனின் விவசாய ஆர்வம் குறித்து தாய் சரண்யா கூறுகையில், ''அமித் பொழுதை போக்குவதற்காக எங்களுடன் தோட்டத்திற்கு வந்தான். காய்கறிகளை எப்படி விளைவிப்பது என்பதை ஆரம்பத்தில் கற்றுக்கொடுத்தோம்.
நாளடைவில் அவனாகவே எல்லா வேலைகளையும் செய்ய பழகிவிட்டான். இந்த ஆண்டு கோடை விடுமுறையில் 15 கிலோ காராமணி, 6 கிலோ கத்திரி, 4 கிலோ பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்துவிட்டான். அதை பார்ப்பதற்கு பெருமையாகவும் இருக்கிறது'' என்கிறார்.