31 ஆம்லெட் சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு
அவித்த முட்டையை விட ஆம்லெட் சாப்பிடுவதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். ஆம்லெட் பிரியர்களை ஈர்க்கும் வகையில் டெல்லியில் சாலையோர கடை நடத்தும் ராஜீவ் பாய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘ஆம்லெட் சேலஞ்ச்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்களை உணவு போட்டிக்கு அழைத்துள்ளார்.
அதன்படி 31 ஆம்லெட்டுகளை 30 நிமிடங்களில் உட்கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார். 31 ஆம்லெட்டுகள்தானே சுலபமாக சாப்பிட்டு விடலாம் என்று எண்ணி விடாதீர்கள். அந்த ஆம்லெட்டில் பல்வேறு உணவுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. முட்டையில் இருக்கும் வெள்ளைக்கருவுக்கு ஈடாக வெண்ணெய் ஆம்லெட்டை ஆக்கிரமித்திருக்கிறது.
அத்துடன் காபாப்கள், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த ஆம்லெட் தயாரிப்பு வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றி ராஜீவ் பாய் ஆம்லெட் தயாரிப்பை தொடங்குகிறார். வெங்காயம், மிளகாய், தக்காளி போன்றவைகளை நறுக்கி வெண்ணெய்யில் சேர்க்கிறார்.
பின்பு பெரிய பாத்திரத்தில் அடித்து வைக்கப்பட்ட 31 முட்டைகளை ஊற்றுகிறார். அது நுரை பொங்க வேக தொடங்குகிறது. பிறகு பிரெட் துண்டுகளை தூவி மறுபுறம் வேகவைப்பதற்கு புரட்டுகிறார். பின்பு ஆம்லெட்டை துண்டுகளாக நறுக்கி மற்றொரு தட்டில் வைக்கிறார். கபாப், வெங்காயம், பாலாடைக்கட்டி, பன்னீர், இன்னும் கூடுதலாக சில காய்கறிகள் சேர்த்து அலங்கரிக்கிறார். இந்த ஆம்லெட்டின் விலை ரூ.1320.
இதனை அரை மணி நேரத்தில் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ராஜீவ் பாய் வெளியிட்ட அறிவிப்பு சமூகவலைத்தளங்களில் பரவி உணவு பிரியர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இருப்பினும் அதிகமான முட்டைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட உணவை குறுகிய நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் பற்றிய விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது. அதேவேளையில் ராஜீவ் பாயின் வேடிக்கையான சவாலை பலரும் வரவேற்றுள்ளனர்.