அத்திப்பழம் செய்யும் மாயஜாலங்கள்
உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களுக்கு அத்திப்பழம் சிறந்த தேர்வாக அமையும். அதில் இருக்கும் நார்ச்சத்து வயிறு நிறைந்த உணர்வை தரும். பசியை தடுக்கும். அதனால் அதிகம் சாப்பிடத் தோன்றாது.
மேலும் அத்திப்பழத்தில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதோடு பல்வேறு உடல் நல நன்மைகளை அத்திப்பழம் வழங்குகின்றன. அவை ஒட்டுமொத்த உடல் நலனை காப்பதில் நிகழ்த்தும் மாயஜாலங்கள் குறித்து பார்ப்போம்.
செரிமானத்தை எளிதாக்கும்
அத்திப்பழத்தின் தனித்துவமான பண்புகளில் ஒன்று, நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதுதான். குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு நார்ச்சத்து முக்கியமானது. தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி புரியும். அதனால் செரிமானம் மேம்படும். இதில் இருக்கும் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து கழிவுப்பொருட்களுடன் பிணைக்கப்பட்டு அவை குடல் வழியாக விரைவாக வெளியேற உதவும்.
அத்திப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கும், உடலில் தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துவதற்கும் உதவி புரியும். இந்த ஆன்டி ஆக்சிடென்டுகளில் கிவெர்செடின், கேடசின்கள் மற்றும் அந்தோசயின்கள் போன்ற பாலிபினால்கள் அடங்கும். இவை இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
இதய ஆரோக்கியம்
இதயத்திற்கு உகந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. ரத்த அழுத்தத்தை பராமரிக்க தேவையான எலக்ட்ரோலைட்டுகள் இதில் ஏராளம் உள்ளன. கூடுதலாக, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் ரத்த நாளங்களின் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன. ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும் உதவி புரிகின்றன.
எலும்பு ஆரோக்கியம்
அத்திப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்பு உருவாக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
சர்க்கரை அளவு
அத்திப்பழம் மிட்டாய் போன்று லேசான இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டவை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கு பொருத்தமானதாக இருக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சப்படுவதை தடுக்க உதவி புரியும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு பொக்கிஷமாக அத்திப்பழம் அமையும்.
சரும நலன்
அத்திப்பழம் சரும நலனையும் பாதுகாக்கக்கூடியது. ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வைட்டமின் ஏ, பி போன்றவை இருப்பதால் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும். கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க தூண்டும். சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றுவதை குறைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அத்திப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் இயற்கையாகவே சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கக்கூடியவை.
சுவாச ஆரோக்கியம்
அத்திப்பழத்தில் மூச்சுக்குழாய் அழற்சி பண்புகளுடன் கூடிய சேர்மங்கள் உள்ளன. இவை சுவாச பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும் குவெர்செடின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. அவை நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி ஆஸ்துமா போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
நோய் எதிர்ப்பு தன்மை
அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும், தொற்றுநோய்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதிலும், நோய்களை குணப்படுத்த உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.