சீட்டுக்கட்டுகளில் பிரமாண்டம்

சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் சீட்டுக்கட்டுகளை கொண்ட பிரமாண்ட கட்டமைப்புகளை வடிவமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார், 15 வயது சிறுவன், அர்னவ் டகா.

Update: 2023-10-17 15:10 GMT

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இவர் 1 லட்சத்து 43 ஆயிரம் சீட்டுக்கட்டுகளை பயன்படுத்தி இருக்கிறார். இதுதான் சீட்டுக்கட்டுகளை கொண்டு உலக அளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கட்டிட வடிவமைப்பு என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. கொல்கத்தாவில் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர் கட்டிடம், ஷாகீத் மினார், சால்ட் லேக் ஸ்டேடியம், புனித பால் தேவாலயம் ஆகிய 4 கட்டிடங்களை மாதிரியாக கொண்டு இந்த பிரமாண்ட கட்டமைப்பை அர்னவ் டகா எழுப்பி இருக்கிறார்.

இதற்காக அந்த 4 பிரபலமான கட்டிடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு கட்டுமான நுணுக்கங்களை குறிப் பெடுத்திருக்கிறார். அதனை அடிப்படையாக கொண்டு சீட்டுக்கட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும், குறுக்கு, நெடுக்குமாகவும் அடுக்கி கட்டமைப்பை எழுப்பி இருக்கிறார்.

சீட்டுக்கட்டையில் ஒரு அட்டை சரிந்தால் கூட ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என்பதால் கவனமாக சீட்டுக்கட்டுக்களை கையாண்டு இருக்கிறார். சுமார் 41 நாட்களாக சீட்டுக்கட்டுகளை பொறுமையாக அடுக்கி தத்ரூபமாக கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறார். இந்த கட்டமைப்பு 12.21 மீட்டர் நீளமும், 3.47 மீட்டர் உயரமும், 5.08 மீட்டர் அகலமும் கொண்டது.

இதில் ஷாகீத் மினார் செங்குத்தான உயரம் கொண்டது என்பதால் அதனை சீட்டுக்கட்டுக்களில் எழுப்பு வதற்கு அர்னவ் டகா ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் சில அடி தூரம் எழுப்பியபோது சீட்டுக்கட்டுகள் சரிந்து விழுந்திருக்கின்றன. அதனை சரிப்படுத்துவதற்கும், மற்ற கட்டமைப்புகள் சரிந்துவிழாமல் தடுப்பதற்கும் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

அதனால்தான் ஒட்டுமொத்த கட்டமைப்பை எழுப்புவதற்கு 41 நாட்கள் ஆனதாக சொல்கிறார். படிப்புக்கு இடையேதான் இந்த பணியை மேற்கொண்டிருக்கிறார். இரண்டையும் சமநிலையில் கையாள வேண்டி இருந்ததும் நாட்கள் அதிகமானதற்கு மற்றொரு காரணம் என்கிறார்.

அர்னவ் டகா, 8 வயதில் இருந்தே சீட்டுக்கட்டுக்களை அடுக்கி சிறு சிறு வடிவமைப்புகளை உருவாக்க தொடங்கிவிட்டார். கொரோனா காலகட்டம்தான் பிரமாண்டமான வடிவமைப்புகளை எழுப்பும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. அதுதான் தற்போது உலக அளவில் பெரிய அளவிலான சீட்டுக்கட்டு கட்டமைப்பை உருவாக்குவதற்கு அடித்தளமிட்டிருக்கிறது.

அர்னவ் டகா சீட்டுக்கட்டுகளை அடுக்கி கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வீடியோவை கின்னஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்