மகளிர் ஆசிய கோப்பை: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி

இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Update: 2024-07-28 12:59 GMT

Image Courtesy : @ACCMedia1

தம்புல்லா,

9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவும், இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி களமிறங்கினர்.

இதில் ஷெபாலி வர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா சேத்ரி 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்மிரிதி மந்தனா, 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஜெமீமா ரோட்ரிக்வெஸ் 29 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய விஷ்மி குணரத்னே, 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஹர்ஷிதாவுடன், சமாரி அத்தபத்து ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், சமாரி அத்தபத்து 61 ரன்களில் தீப்தி சர்மா வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

மறுபுறம் அதிரடி காட்டிய ஹர்ஷிதா, 51 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்