கம்பீர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் - முன்னாள் பயிற்சியாளர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.;
புதுடெல்லி,
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிந்தது.
இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணி தற்போது வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், கவுதம் கம்பீருக்கு அதிக அனுபவம் இருப்பதாகவும், அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, கவுதம் கம்பீருக்கு நிறைய அனுபவம் உள்ளது. மேலும், ஒரு வீரராக அவர் நிறைய போட்டிகளில் ஆடி உள்ளார். பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவமும் அவரிடம் உள்ளது. அவரது அனுபவத்தால் இந்திய அணி கண்டிப்பாக பயனடையும். அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.