பந்தை சேதப்படுத்தியதாக விமர்சித்த ஆஸி. ரசிகர்கள்.. பதிலடி கொடுத்த விராட் கோலி.. என்ன நடந்தது..?

இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது.;

Update: 2025-01-05 05:53 GMT

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் நடைபெற்ற கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் அடைந்த தோல்விகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளது.

இந்த தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்கள் அடித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியை இந்தியா 181 ரன்களில் சுருட்டி அசத்தியது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஆஸ்திரேலிய ரசிகர்களும், ஊடகங்களும் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும் பும்ரா தனது ஷூவில் இருந்து 'சாண்ட் பேப்பர்' போன்று எதையோ எடுப்பதாகவும், அதனை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் இலக்கை சேசிங் செய்தபோது இந்திய பவுலர்கள் தொடக்க வரிசை விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றினர். அப்போது மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய அணி பந்தை சேதப்படுத்தி விட்டதாக குரல் எழுப்பினர்.

இதனை கவனித்த விராட் கோலி தன்னுடைய பேண்ட் பாக்கெட்டை திறந்து ரசிகர்களிடம் காண்பித்தார். மேலும் தன்னிடம் 'சாண்ட் பேப்பர்' இல்லை என கூறினார். மேலும், நாங்கள் உங்களைப் போல் பந்தை சேதப்படுத்த மாட்டோம் என்றும் சைகையில் ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் சுமித் மற்றும் பான் கிராப்ட் ஆகியோர் சாண்ட் பேப்பரை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு கிரிக்கெட் விளையாட சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டனர். அதனை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்