ஸ்டார்க், கம்மின்ஸ் இல்லை.. அவர்தான் இந்த தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் - ரிக்கி பாண்டிங் புகழாரம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது.;

Update:2025-01-06 13:31 IST

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டு, மெல்போர்னில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன. மழையால் 3-வது டெஸ்ட் மட்டும் டிராவானது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் எடுத்தன. 4 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (8 ரன்), வாஷிங்டன் சுந்தர் (6 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 39.5 ஓவர்களில் 157 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய பந்து வீச்சின் ஆணிவேராக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுதண்டு வடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் நேற்றைய தினம் பந்து வீசாமல் ஓய்வு எடுத்தார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகிப் போனது.

அதே சமயம் பும்ராவின் தாக்குதல் இல்லாததால் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் சாம் கான்ஸ்டாசும், உஸ்மான் கவாஜாவும் இன்னிங்சை அதிரடியாக தொடங்கினர். ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட் எடுத்த ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலன்ட் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் தங்கள் நாட்டு பந்துவீச்சாளர்களை விட ஜஸ்பிரித் பும்ராதான் சிறந்தவராக செயல்பட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் சுமித், ஹெட் உள்ளிட்ட அனைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும் ஜஸ்பிரித் பும்ரா திணற விட்டதாகவும் பாண்டிங் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது நான் பார்த்ததிலேயே வேகப்பந்து வீச்சு ராஜாங்கம் நடத்திய சிறந்த தொடர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகள் இந்தத் தொடர் முழுவதும் இருந்தது. ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது பும்ராவின் பவுலிங், பேட்டிங்கை மிகவும் கடினமாக மாற்றியது. ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் நிறைய தரம் இருக்கிறது. ஆனால்  அவர்கள் அனைவரையும் பல்வேறு நேரங்களில் பும்ரா திணறடித்தார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்