அந்த விஷயத்தில் இங்கிலாந்தை விட இந்தியா சிறந்த அணி - மைக்கேல் வாகன் பாராட்டு
ஆஷஸ் தொடர் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.;
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனால் ஆஷஸ் தொடரை விட பார்டர் - கவாஸ்கர் சிறந்தது என்று சில முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் யார் கூறினாலும் ஆஷஸ் மட்டுமே சிறந்தது என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு போட்டியை கொடுப்பதில் இங்கிலாந்தை விட இந்தியா சிறந்த அணி என்று அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு:- "எப்போதும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதலே சிறப்பான போட்டியாகும். ஆனால் தற்சமயத்தில் ஆஸ்திரேலியா - இந்தியா சிறந்த போட்டியாக இருக்கிறது. ஆஷஸ் 150 வருட பழமை வாய்ந்தது. ஆனால் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல் 20 வருடங்களாக மட்டுமே இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா பார்ப்பதற்கு மிகவும் சிறந்த தொடர் என்று நீங்கள் சொல்லலாம்.
ஆனால் ஆஷஸ் இப்போதும் மிகப்பெரிய போட்டி என்று நினைக்கிறேன். இருப்பினும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற கடந்த தொடரில் இங்கிலாந்து போதுமான போட்டியை கொடுக்கவில்லை. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் நிறைய போட்டியை கொடுத்து நல்ல தொடரை உருவாக்குகிறோம். ஆனால் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்கள் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் போட்டி மிகுந்ததாக இருக்கிறது.
அதே சமயம் இந்த தொடரில் முதல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் இந்திய அணியால் ஆஸ்திரேலியாவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா நல்ல கிரிக்கெட்டை விளையாடி எப்போதும் முன்னிலையில் இருந்தார்கள்" என்று கூறினார்.