இந்திய அணிக்கு மிகச்சிறந்த திறமையான ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார் - இர்பான் பதான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.;

Update:2025-01-06 20:48 IST

Image Courtesy: AFP 

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதனால் 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா இழந்துள்ளது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 3-வது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற கனவும் முடிவுக்கு வந்தது.

சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா, தற்போது பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இந்த தோல்விகளுக்கு முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் விராட் பேட்டிங்கில் ஜொலிக்காதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த தொடரில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இந்நிலையில், இந்திய அணிக்கு மிகச்சிறப்பான ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார் என நிதிஷ்குமார் ரெட்டியை இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணிக்கு மிகச்சிறந்த திறமையான ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளங்களில் அறிமுகமாகி ரன்களை குவிப்பது எளிதான விஷயமல்ல. இந்த பாராட்டுகள் அவர் சதம் விளாசியதற்காக மட்டுமல்ல. அவர் சதம் அடிப்பதற்கு முன் தொடர்ச்சியாக 40 ரன்களை குவித்து வந்திருக்கிறார். ஆனால் அவரின் சதம், மொத்தமாக இந்திய அணி நிர்வாகத்தில் இருப்பவர்களின் சிந்தனையை மாற்றிவிட்டது. அவரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நிதிஷ் குமார் ரெட்டியால் நம்பர் 6 முதல் 8 வரை என்று எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட முடியும். என்னை பொறுத்தவரை அவர் தொடர்ச்சியாக நம்பர் 6 பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. இந்திய அணி நீண்ட காலமாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சனைக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி வந்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்