நமக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை - இந்திய முன்னாள் வீரர்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்தது.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதனால் 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா இழந்துள்ளது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 3-வது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற கனவும் முடிவுக்கு வந்தது.
சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா, தற்போது பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இந்த தோல்விகளுக்கு முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் விராட் பேட்டிங்கில் ஜொலிக்காதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அணிக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவை இல்லை எனவும், சிறப்பாக விளையாடுபவர்களே அணிக்கு தேவை எனவும், சூப்பர் ஸ்டார் ஆக நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே கிரிக்கெட் விளையாடி கொள்ளலாம் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சூப்பர் ஸ்டார் கலாசாராம் உருவாகி வருகிறது.
நமக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவை இல்லை, சிறப்பாக விளையாடுபவர்களே தேவை. சூப்பர் ஸ்டார் ஆக நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே கிரிக்கெட் விளையாடி கொள்ளவும், இந்திய அணிக்கு வரவேண்டாம். அடுத்ததாக இங்கிலாந்து தொடர் வரவிருக்கிறது. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பிடிப்பார்கள், என்ன நடக்குமென அனைவரும் பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை யார் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்களே அணியில் இடம் பெற வேண்டும். ஒருவரின் மதிப்பை வைத்து தேர்வு செய்ய முடியாது. அப்படி செய்தால் கபில் தேவ், சுனில் கவாஸ்கரையும் அழைத்து செல்லுங்கள். சூப்பர் ஸ்டார் கலாசாரம் இந்திய அணியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்லாது.
விராட் கோலி, ரோகித் சர்மா என யாராக இருந்தாலும் அவர்களது செயல்பாடுகளை வைத்து தேர்வு செய்யுங்கள். விளையாட்டைவிட யாரும் பெரியவர்கள் கிடையாது. அவர்களது மனதில் தங்களைப் பெரிய சூப்பர்ஸ்டாராக நினைத்தாலும் பரவாயில்லை. இந்திய அணியை முன்னோக்கி கொண்டு செல்ல இதை செய்தாக வேண்டும். நான் அவர்களை கழட்டிவிட சொல்லவில்லை. இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அவர்களை கவுண்டி கிரிக்கெட் அல்லது வேறு எதாவது உள்ளூர் போட்டிகளில் முதல்தர கிரிக்கெட் விளையாட வேண்டும். இது தேர்வுக்குழுவுக்கு சவாலாக இருந்தாலும் இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.
யாருக்கு எவ்வளவு வாய்ப்பு கிடைக்கிறது. அதில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அணியில் எடுப்பதும் உட்காரவைப்பதும் நடக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் அதிக திறமைசாலிகள் இருக்கிறார்கள். விராட் கோலியின் எண்கள் கவலையளிக்கிறது. எனக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு இளைஞருக்கு வாய்ப்பு தந்தாலும் அவரும் கோலியின் சாதனைகளை நிகழ்த்துவார். இவ்வாறு அவர் கூறினார்.