சிட்னி டெஸ்ட்: 3-வது நாளில் இந்திய அணி பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடியதன் காரணம் என்ன..?

இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது டெஸ்ட் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.;

Update: 2025-01-05 08:20 GMT

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சிட்னியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி 'பிங்க் டெஸ்ட்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத் நடத்தி வரும் புற்று நோய்க்கு எதிரான அறக்கட்டளையே இதற்கு காரணமாகும். ஆண்டு தோறும் சிட்னியில் நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இளஞ்சிவப்பு நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியினரும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடினர். அதற்கான காரணம் என்னவெனில், மெக்ராத், இந்திய அணியினருக்கும் பிங்க் நிற தொப்பி மற்றும் ஜெர்சியை வழங்கி புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த செயல்பாட்டினை முன்னெடுத்துள்ளார். இந்திய அணியினரும் அதனை மறுக்காமல் ஏற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

 கிளென் மெக்ராத்தின் மனைவி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக காலமானார். அதனை தொடர்ந்து இதேபோன்று யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாதுகாப்பு குறித்தும் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். அந்த அறக்கட்டளைக்காக இந்த பிங்க் டெஸ்ட் போட்டியை நடத்தி நிதிதிரட்டி வருகிறார். இதில் கிடைக்கும் பணம் முழுவதையும் அவர் அந்த அறக்கட்டளையில் செலுத்தி அதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்