டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

Update: 2024-09-20 03:24 GMT

Image Courtesy: AFP  

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டகாரரான ரோகித் 6 ரன்களிலும், கில் டக் அவுட் ஆகியும், கோலி 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். மூவரின் விக்கெட்டையும் ஹசன் மக்மூத் காலி செய்தார்.

இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஜெய்ஸ்வால் - பண்ட் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டனர். ரிஷப் பண்ட் தனது பங்குக்கு 39 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கே.எல். ராகுல் 16 ரன்களில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பின்னர் ஆல் ரவுண்டர்களான அஸ்வின் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் சரிவிலிருந்து மீண்ட இந்தியா முதல் நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தியதன் மூலம் அஸ்வின் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20க்கும் அதிகமான 50+ ரன்கள் மற்றும் 30க்கும் அதிகமான 5+ விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 சதம், 14 அரைசதம் உட்பட 3411 ரன்களும், 36, 5+ விக்கெட்டுகளுடன் 516 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது வரிசை அல்லது அதற்கு அடுத்த வரிசைகளில் களம் இறங்கி அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அஸ்வின் (4 சதம்) 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி (5 சதம்) முதல் இடத்தில் உள்ளார். இதையடுத்து 3வது இடத்தில் பாகிஸ்தானின் கம்ரன் அக்மல், வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் (தலா 3 சதம்) உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்