விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி,
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இன்று தொடங்குகிறது.
ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை, தமிழகம் உள்ளிட்ட 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.
இதில் தமிழக அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சண்டிகார், மிசோரம், சத்தீஷ்கார், ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், விதர்பா ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே (மும்பை), ருதுராஜ் கெய்க்வாட் (மராட்டியம்), சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு), அபிஷேக் ஷர்மா, அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்), திலக் வர்மா (ஐதராபாத்), மயங்க் அகர்வால் (கர்நாடகா), அக்ஷர் பட்டேல் (குஜராத்), இஷான் கிஷன் (ஜார்கண்ட்), ரிங்கு சிங் (உத்தரபிரதேசம்) உள்பட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள்.
தொடக்க நாளான இன்று 18 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் சண்டிகாரை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் அரங்கேறுகிறது.