அஸ்வின் ஓய்வு முடிவை பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை - ரவீந்திர ஜடேஜா

ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Update: 2024-12-21 06:43 GMT

கோப்புப்படம்

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2010 முதல் இந்தியாவுக்காக விளையாடிய அவர் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக சர்வதேச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற உலக சாதனையும் அஸ்வின் நிகழ்த்தியுள்ளார். அவரது ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு மட்டுமின்றி பல வீரர்களுக்கும் ஆச்சரியமாக அமைந்தது. இந்நிலையில், அஸ்வின் ஓய்வு பெறுவது பற்றி தம்மிடம் எதுவும் கூறவில்லை.

அவரது ஓய்வு முடிவு கடைசி நேரத்தில் தான் எனக்கு தெரியும் என்றும் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அஸ்இன் ஓய்வு பற்றி செய்தியாளர் சந்திப்பதற்கு 5 நிமிடங்கள் முன்பாகத் தான் எனக்கு தெரிந்தது. அது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் நாள் முழுவதும் நாங்கள் நேரத்தை ஒன்றாக செலவிட்டோம். ஆனால் ஓய்வு பற்றிய குறிப்பைக் கூட அவர் என்னிடம் சொல்லவில்லை.

அவருடைய மனம் எப்படி வேலை செய்யும் என்பது நமக்குத் தெரியும். அவர் எனக்கு களத்தில் ஆலோசகரை போன்றவர். நீண்ட வருடங்களாக நாங்கள் ஒன்றாக விளையாடினோம். போட்டியின் சூழ்நிலைகளைப் பற்றியும் பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை பற்றியும் நாங்கள் ஒருவருக்கொருவர் செய்திகளை பரிமாறிக் கொண்டோம்.

அந்த அனைத்தையும் இனிமேல் மிஸ் செய்வேன். இந்திய அணிக்காக அஸ்வினை விட சிறந்த ஆல் ரவுண்டர் பவுலர் கிடைப்பார் என்று நாம் நம்புவோம். ஒவ்வொருவருக்கும் தகுந்த மாற்று வீரர்கள் வருவார்கள். இந்தியாவில் நல்ல இளம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் எங்களை போன்றவர்களுக்கு மாற்று வீரர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. நாம் நகர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்