விஜய் ஹசாரே டிராபி: ஸ்ரேயாஸ் அதிரடி சதம்...மும்பை 382 ரன்கள் குவிப்பு
மும்பை தரப்பில் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்தில் 114 ரன்கள் எடுத்தார்.
அகமதாபாத்,
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இன்று தொடங்கியது.
இதில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆட்டம் ஒன்றில் மும்பை - கர்நாடகா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஹர்திக் தாமோர் களம் இறங்கினார். ஹர்திக் தாமோர்-ஆயுஷ் மத்ரே இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஆயுஷ் மத்ரே 78 ரன்னிலும், ஹர்திக் தாமோர் 84 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 20 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கர்நாடகாவின் பந்துவீச்சில் இருவரும் சிக்சர் மழை பொழிந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட்டை மட்டும் இழந்து 382 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்தில் 114 ரன்னும், ஷிவம் துபே 36 பந்தில் 63 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இதையடுத்து 383 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா ஆடி வருகிறது.