சையத் முஷ்டாக் அலி கோப்பை; தமிழகம் - உத்தரகாண்ட் அணிகள் இன்று மோதல்
தமிழகம் இதுவரை 6 ஆட்டங்களில் 2 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது.;
இந்தூர்,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் 'நாக்-அவுட்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.
இந்த தொடரில் குரூப் பி-யில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது 7வது லீக் ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணியை இன்று எதிர்கொள்கிறது. தமிழகம் இதுவரை 6 ஆட்டங்களில் 2 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. மேலும், கடைசியாக ஆடிய 4 ஆட்டங்களிலும் தமிழகம் தொடர் தோல்விகளை கண்டுள்ளது.
அதன் காரணமாக வெற்றிப்பாதைக்கு திரும்ப தமிழக அணி கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.