சூர்யகுமார் யாதவ் அல்ல...வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான் - ரோகித் சர்மா பாராட்டு

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றை ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

Update: 2024-06-21 05:35 GMT

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை சூர்யகுமார் யாதவும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினர்.

இந்திய தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். மற்ற பவுலர்கள் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்நிலையில் சூர்யகுமார் - பாண்ட்யா பார்ட்னர்ஷிப்பை விட 4 ஓவர்களில் வெறும் 7 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"கடந்த சில வருடங்களாக நாங்கள் இம்மைதானத்தில் சில டி20 போட்டிகளை விளையாடியுள்ளோம். எனவே நாங்கள் கொஞ்சம் நன்றாக திட்டமிட்டு கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொண்டோம். இந்த இலக்கை கட்டுப்படுத்தக்கூடிய கிளாஸ் பவுலிங் எங்களிடம் இருப்பது தெரியும். அனைவரும் இங்கே வந்து தங்களுடைய வேலையை செய்தனர். அதையே நாங்களும் தொடர்ந்து பேசி வருகிறோம். சூர்யகுமார் - பாண்ட்யா பார்ட்னர்ஷிப் கடைசியில் நன்றாக அமைந்தது.

பும்ரா எங்களுக்காக என்ன செய்வார் என்பதை நாங்கள் அறிவோம். அவரை சாதுரியமாக பயன்படுத்துவது முக்கியம். அவர் எப்போதும் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்கு தயாராக இருக்கக்கூடிய ஒருவர். இந்தியாவுக்காக விளையாடும் போதெல்லாம் அவர் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பார். இங்குள்ள சூழ்நிலைகளை நான் பார்த்தேன்.

அதேபோல அடுத்த போட்டியில் எதிரணியை பார்த்து தேவைப்பட்டால் எங்களுடைய அணியில் மாற்றம் செய்வோம். இந்த போட்டியில் 3 ஸ்பின்னர்கள் விளையாடினால் நன்றாக இருக்கும் எனக் கருதினோம். அதனால் அந்தத் தேர்வை எடுத்து வந்தோம். முன்னோக்கி நகரும்போது தேவைப்பட்டால் நான் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் போட்டியை துவக்குவேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்