என்னுடைய 800 டெஸ்ட் விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - முத்தையா முரளிதரன்
இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.;
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவர் இலங்கை அணிக்காக 133 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 12 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். உலகின் தலைசிறந்த சுழற் பந்து வீச்சாளரான இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி யாருமே அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாத உலக சாதனையை படைத்திருக்கிறார்.
வளர்ந்து வரும் நவீன கிரிக்கெட்டில் அவரது உலக சாதனையை யார் முறியடிப்பார்கள்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஒரு அணி வருடத்திற்கு 6 முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடுகிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடர் நடைபெறுகிறது. ஆனால், மற்ற நாடுகளில் இருக்கும் ரசிகர்கள் அதை விரும்பி பார்ப்பதில்லை. இதனால் டெஸ்ட் போட்டிகள் மிகவும் குறைவாகவே விளையாடப்படுகின்றன.
தற்போதுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது800 விக்கெட்டுகள் சாதனையை தாண்டுவது என்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் குறுகிய வடிவ கிரிக்கெட்டுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் நாங்கள் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடினோம். ஆனால் தற்போது தொழில் குறுகிய வடிவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.