அவர் அணியில் இருப்பது இந்தியாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது 2வது இன்னிங்சில் 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது. சாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
வங்காளதேசம் வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் எதிரணி, பிட்ச், கால சூழ்நிலை ஆகியவை எதுவாக இருந்தாலும் ஜஸ்ப்ரீத் பும்ரா பலவீனம் இல்லாத பவுலராக செயல்படுவதாக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். அவரைக் கொண்டிருப்பதற்கு இந்திய அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அவருடைய வேரியேசன், கூர்மையாக சிந்திக்கும் திறன் ஆகியவற்றைப் பற்றி நாம் அறிவோம். தஸ்கின் அகமதுக்கு எதிராக அவர் பந்து வீசிய விதத்திலும் அதை கண்டோம். இப்போட்டியில் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால் எதிரணி யாராக இருந்தாலும், ஆடுகளச் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் அவர் பலவீனம் இல்லாத ஒரு பந்துவீச்சாளர். அது தான் மகத்துவத்தை மதிப்பிடுவதற்கான உண்மையான சிறந்த வழி.
அவர் அணியில் இருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு அதிர்ஷ்டம். இதைத் தவிர்த்து சாம்பியன் பவுலரான பும்ராவை பற்றி சொல்ல வேறு ஏதாவது இருக்கிறதா?. அவர் தம்முடைய பலத்தையும், ஜீரோ பலவீனத்தையும் கொண்ட பவுலராக இருக்கிறார் என்பதை இன்று நான் உணர்ந்தேன். அதுவே மகத்துவத்திற்கான அளவுகோல் என்று கணிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.