இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும் - பாகிஸ்தான் வீரர் யோசனை
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
கராச்சி,
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பின்வாங்கியதால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல் 2027-ம் ஆண்டு வரை இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. போட்டிகளுக்கு நாங்களும் அங்கு செல்லமாட்டோம், அதற்கு பதிலாக மாற்று இடத்தில் தான் ஆடுவோம் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிபந்தனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத் வித்தியாசமான யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை கட்ட வேண்டும். அதன் ஒரு நுழைவு வாயில் இந்தியாவிலும், மற்றொரு நுழைவு வாயில் பாகிஸ்தான் எல்லையிலும் இருக்க வேண்டும்.
இரு நாட்டு வீரர்கள் தங்களது எல்லையில் இருக்கும் நுழைவு வாயில் வழியாக வந்து விளையாடலாம். இந்த மாதிரி செய்தால் கூட இந்திய அரசுக்கும், அதன் கிரிக்கெட் வாரியத்துக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். மைதானத்தில் எங்களது வீரர்கள் அவர்கள் பகுதிக்கு செல்லும் போது, விசா தேவைப்படும் என்று சொல்வார்கள். ஆனால் விசா வழங்கமாட்டார்கள்.
பாகிஸ்தான் அணிக்கு சொந்த மண்ணில் இந்தியாவுடன் விளையாடும் பொன்னான வாய்ப்பு பறிபோய் விட்டது. எந்த காலத்திலும் இனி இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாடும் என்ற எண்ணத்தை முற்றிலும் மறந்து விட வேண்டியது தான். இவ்வாறு அவர் கூறினார்.