அஸ்வின் தேர்ந்தெடுத்த ஆல் டைம் சிறந்த ஐ.பி.எல். அணி.. யாருக்கெல்லாம் இடம்..?
ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்து விளங்கிய 11 வீரர்களைக் கொண்ட தனது ஆல் டைம் கனவு அணியை அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ளார்.;
சென்னை,
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர்.
அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் ஐசிசி தொடர்களுக்கு நிகரான திரில்லர் போட்டிகளை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்தத் தொடரில் நிறைய வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்து விளங்கிய 11 வீரர்களைக் கொண்ட தனது ஆல் டைம் கனவு அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்ந்தெடுத்துள்ள அவர், கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார். மேலும் 'சின்ன தல' சுரேஷ் ரெய்னாவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
அஸ்வின் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த ஐ.பி.எல். அணி:- ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், ஏபி டி வில்லியர்ஸ், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுனில் நரேன், ரஷித் கான், புவனேஸ்வர் குமார் லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா.