நுரையீரல் தொற்று முதல் புற்று நோய் வரை தவிர்ப்பதும் காப்பதும்

இன்று அதிக அளவில் நுரையீரல் பாதிப்புக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். நுரையீரல் தொற்றிலிருந்தும் புற்று நோயிலிருந்தும் எப்படி தற்காத்துக் கொள்வது என நுரையீரல் சிறப்பு மருத்துவர் மணிமாறனிடம் நேர்காணல் கண்டோம். அவரின் விரிவான விளக்கத்தை காணலாம்.

Update: 2023-10-24 07:37 GMT

நுரையீரல் பாதிப்பு அல்லது நோய் இருந்தால் தென்படக் கூடிய அறிகுறிகள் என்னென்ன?

நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா தான். நெஞ்சில் சளி கட்டி இருமலாக மாறும், இரவிலும் அதிகாலையிலும் இருமல் அதிகமாக இருக்கும். கட்டி கட்டியாக சளி வெளியேறுதல், மூச்சுத் திணறல், சுவாசிக்கும் போது பூனை கத்துவது போன்ற சப்தம் கேட்பது போன்றன பொதுவாக இந்த நோயிற்கான அறிகுறிகள்.

ஆஸ்துமா அல்லது இந்த அலர்ஜி எதனால் ஏற்படுகிறது? என்ன காரணம்?

இவ்வகை அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது. இந்த அலர்ஜி தூசியால், செல்லப் பிராணிகளின் ரோமங்களை சுவாசித்தாலோ அல்லது பூஞ்சை காளான்கள் அல்லது மகரந்த துகள்களை சுவாசித்தாலோ கூட இது போன்ற சளி, தும்மல், இருமல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற மாசுபடுத்திகளால் நுரையீரலில் உள்ள ம்யூக்கஸ் சுரப்பிகள் வீங்கி அதிகப்படியான சளியை உண்டு பண்ணுகின்றன. மூச்சுக்குழாயின் சுருங்கும் தன்மை அதிகமாவதால் வீசிங் வருகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நடக்கும் போது மாடிப்படி ஏறும் போது வீசிங் அதிகமாகும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மூச்சு விடும் போது சப்தம் அதிகமாகிறது. இவற்றை ஆஸ்துமா அல்லது அலர்ஜி Bronchitis என்று சொல்வார்கள்.

இந்த அலர்ஜி அல்லது ஆஸ்துமா வந்தால் எடுக்க வேண்டிய சிகிச்சை என்ன?

அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் மற்றும் inhaler-ஐ தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மக்கள் பலருக்கு inhaler எடுப்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. ஆனால், Inhaler- ல் ஸ்டீராய்டு இருக்கும் என அச்சப்பட தேவையில்லை. மைக்ரோ மில்லிகிராம் அளவே அது இருக்கும் என்பதோடு இது மாத்திரை போல உணவுக் குழாயிலிருந்து ரத்தத்தில் கலக்கும் தன்மை கிடையாது என்பதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. இன்ஹேலரை பயன்படுத்திய பிறகு வாய்க் கொப்பளிப்பது அவசியம்.

அதே போல ஆஸ்துமா வந்தால் மருந்து இன்ஹேலர் எடுப்பது மட்டுமல்ல, வீட்டில் தூசி சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்வது, செல்லப்பிராணிகள், பறவைகளை தவிர்ப்பது, மழை அல்லது குளிர்காலங்களில் விடியற்காலை நடைப்பயிற்சி செய்வதை தவிர்ப்பது போன்றவற்றால் இந்த அலர்ஜி பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் நுரையீரல் செயல்பாடு சோதனை ( Pulmonary function Test) செய்வது போன்றவை இன்றியமையாதது.

செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் நுரையீரல் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது என்று கூறினீர்கள், புறாவால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுமா?

புறாக்களின் கழிவுகளை நீண்ட நாட்களாக சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்க வாய்ப்புண்டு. அலர்ஜி உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இந்த கழிவை சுவாசிப்பவர்களுக்கு Hypersensitivity Pneumonitis என்ற ஒரு வகை மிகைபடுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி வரலாம். ஒன்று இரண்டு புறாக்களால் எந்த பிரச்சனையும் வராது. இவ்வகையான அலர்ஜி தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மிக அதிகம்.

இப்போதைய மழைக் குளிர்காலங்களில் வரக்கூடிய ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

தற்போது வரக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் தொண்டை வலியாக தொடங்கி, காய்ச்சல், தலை பாரம் வந்து பிறகு இருமலாக மாறும். இந்த வகை காய்ச்சலால் வரும் இருமலை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இவ்வகை அறிகுறிகளை Post Viral Bronchitis என்று அழைப்போம். அதாவது வைரஸ் காய்ச்சலின் பின் விளைவுகள். அதோடு சைனஸிட்டிஸ், வீசிங்க் பிரச்சினை போன்ற அலர்ஜி இருக்கும் நபர்களுக்கு இந்த அறிகுறிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

சாதாரணமாக ஒருவருக்கு சளி அல்லது காய்ச்சல் வந்தால் இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும் ஆனால் இந்த வகை ஃப்ளூ காய்ச்சல் குணமாக இரண்டு மூன்று வாரங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த ஃபேக்டீரியா,வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

இது போன்ற வைரல் இன்ஃபெக்ஷன் வைரஸால் ஏற்படும் தொற்று. இவை பொதுவாக காற்றுவழியாக மற்றவர்களுக்கு பரவும். குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இது எளிதில் பரவ வாய்ப்புள்ளது. அந்த குழந்தைகள் மூலம் பெற்றோருக்கும் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிக்கும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு இவ்வகை தொற்று சுலபமாக வர வாய்ப்பு உள்ளது அதனை தொடர்ந்து நிமோனியா வர அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வயதினர்களுக்கு ஆண்டு தோறும் ஃப்ளூ வைரஸிற்கான Influenza shot என்ற தடுப்பூசி போடுவதால் ஃப்ளூ காய்ச்சலை தவிர்க்கலாம்.

நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடிப்பது மட்டுமே காரணமா?

நிச்சயமாக இல்லை! புகைபிடிப்பது நுரையீரல் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கி்ல்லை என்றாலும், மரபணு சார்ந்த காரணங்கள், காற்று மாசுபாடு போன்ற மற்ற காரணங்களால் கூட நுரையீரல் புற்றுநோய் வரலாம்.

பொதுவாக சரியான நேரத்திற்கு உணவு உண்பது, துரித உணவுகளை தவிர்த்து சத்தாண உணவுகளை உண்பது, நல்ல தூக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சி, புகைப் பிடிப்பது அல்லது மது அருந்துவதை தவிர்த்தல் போன்றவற்றை சரியாக பின்பற்றினால் பெரும்பாலும் புற்றுநோய் வருவதில் இருந்து தப்பலாம்.

நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் எவை எவை?

நுரையீரல் புற்றுநோயை பொறுத்தவரை சிறிய அளவிலான கேன்சர் கட்டி ஒருவரின் உடலில் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்போ அறிகுறிகளோ ஏற்படுத்தாது. இவை பெரிய அளவில் வந்த பிறகே அவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படும். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், ரத்த வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும் போது கேன்சரின் மூன்றாவது அல்லது நான்காவது நிலையிலே தான் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

இதனை தவிர்க்க வருடம் தோறும் முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். இவ்வாறு செய்யும்போது ஆரம்ப நிலையிலேயே நோயினை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் ஆரம்ப நிலையிலையே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். அதிக பாதிப்பிற்கு உள்ளான பிறகு தெரிய வந்தால் அதனை குணமாக்குவது கடினம்.

நுரையீரல் வீக்கம் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது?

நுரையீரல் வீக்கம் என்பது COPD (Chronic Pulmonary Obstructive Disease ) நாள் பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று சொல்வார்கள். புகைபிடிப்பது, காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் மூச்சுக் குழாய் சுருங்கி நுரையீரல் வீங்குவது. இவை பொதுவாக சுற்றுச்சூழல் காரணமாக வரக்கூடியவை. பெரும்பாலும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. முற்காலத்தில் விறகு மற்றும் வரட்டிகளை உபயோகித்து அடுப்பு எரித்ததால் பெண்களுக்கும் பாதிப்பு அதிகம் இருந்து வந்தது, இடை பட்ட காலத்தில் சமையல் எரிவாயுவான LPG வந்த பிறகு பெண்களிடையே இந்த COPD குறைவானது. தற்போது passive smoking (அதாவது அருகில் உள்ளவர்கள் புகைபிடிப்பதை சுவாசிப்பது), அல்லது புகைபிடிப்பது போன்ற காரணங்களால், கொசுவர்த்தி சுருள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளான காற்று மாசுபாடு போன்றவற்றால் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கும் Inhaler தொடர்ந்து உபயோக படுத்த வேண்டும்.

பொதுவாக மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் நுரையீரல் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது, இந்த அறிகுறிகள் ஏற்படலாம் மருத்துவரை அணுகுவது எவ்வளவு முக்கியம்?

பொதுவாக தூசி, மற்ற சில அலர்ஜிகளால் முதலில் தும்மல், மூக்கடைப்பு ஏற்படுத்தும் அதை சரியாக குணப்படுத்தா விட்டால் அலர்ஜி மற்றும் சைனசிட்டிஸ் ஏற்பட்டு நுரையீரலில் சளி உண்டாகலாம், இதனை தொடர்ந்து இருமல் ஏற்படும், அடிக்கடி இருமி சளியை வெளியேற்றிக் கொண்டே இருப்பார்கள். பொதுவாக விடியற்காலை நேரங்களில் இருமல், தும்மல், மூக்கடைப்பு ஏற்படும் இவையெல்லாமே அலர்ஜிக்கான அறிகுறிகள், இதனை தொடர்ந்து வீசிங் ஏற்படும். இதற்கு மருத்துவரை அணுகி அலர்ஜி மாத்திரைகள் எடுக்கலாம், அடிக்கடி வரும்பட்சத்தில் inhaler சிறந்த தீர்வு.

நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்னென்ன பயிற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும்? என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

ஏசியை அடிக்கடி பராமரித்து உபயோகபடுத்த வேண்டும், சீரற்ற தூக்கம், இவை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க மூச்சுப் பயிற்சி தொடர்ச்சியாக செய்ய வேண்டும் உடற்பயிற்சி, ஏதாவது விளையாட்டு வீசிங், அலர்ஜிக்கான வாய்ப்புகளை குறைக்கும்.

சத்தான உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்வது, கீரை, காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

முகக் கவசம் உபயோகப் படுத்துவது தேவையா?

தற்போது ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் நிச்சயமாக பொது இடங்களுக்கு செல்லும் போதும், பேருந்து ரயில் பயணங்கள் போன்றவற்றில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவதுநல்லது.

Tags:    

மேலும் செய்திகள்