தனி நபர் மற்றும் சமூகத்திற்கான யோகா..!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவின் ஸ்ரீநகரில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Update: 2024-06-20 08:38 GMT

இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையான யோகாசனத்தின் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச யோகா தினம் உலகளவில் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்மொழிந்தபோது, யோகா மீது உலகின் பார்வை பதிந்தது. இந்த முன்மொழிவைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐநா அறிவித்து, 2015ம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

யோகா வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நாளில் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறார்கள். இந்த நாளில், மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகா பயிற்சி செய்கின்றனர்.

அவ்வகையில் இந்தியாவின் ஸ்ரீநகரில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தால் ஏரிக்கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், மாணவர்கள், விளையாட்டு பிரபலங்கள், யோகா ஆர்வலர்கள், உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் பிரதமருடன் இணைந்து யோகாசனம் செய்ய உள்ளனர்.

யோகா தினத்தையொட்டி யோகா தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் வீடியோக்களை பலரும் வெளியிட்டுள்ளனர். தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 'தனி நபர் மற்றும் சமூகத்திற்கான யோகா' என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும்.

அதாவது, தனி நபர்கள் மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் யோகா எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா வழிவகை செய்கிறது. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டுகிறது. நமது பிசியான வாழ்க்கையில் சமநிலையை மீட்டெடுக்கவும் உதவுகிறது. எனவே, மாற்றத்திற்கான சக்தியாக விளங்கும் யோகாவை, இந்த சிறப்பு நாளில் கொண்டாடுவோம். 

Tags:    

மேலும் செய்திகள்