நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: அடுத்தடுத்து வடங்கள் அறுந்ததால் பரபரப்பு

450 டன் எடை கொண்ட தேர் வடங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அறுந்ததால் தேரை இழுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.;

Update: 2024-06-21 04:28 GMT

நெல்லை,

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆனிமாதம் நடைபெறும் பெருந்திருவிழா புகழ் பெற்றதாகும். அத்தகைய ஆனிப்பெருந்திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், காலை மற்றும் இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா மற்றும் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை டவுன் ரத வீதிகளில் திரண்டுள்ளனர். அவர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரில் கயிறால் திரிக்கப்பட்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டு தேரை இழுப்பது வழக்கம். வழக்கம் போல இந்த ஆண்டும் கயிறால் திரிக்கப்பட்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக தேர் வடங்கள் அடுத்தடுத்து அறுந்தன. இதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து மாற்று வடம் கொண்டுவந்து கட்டப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் இரண்டாவதாக கட்டப்பட்ட வடமும் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 450 டன் எடை கொண்ட தேர் வடங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அறுந்ததால் தேரை இழுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் கயிறால் திரிக்கப்பட்ட வடங்களுக்கு பதில் இரும்பு சங்கிலி கொண்டுவரப்பட்டு தேரை இழுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடங்கள் பழமையானதாக இருந்தது என்றும், வடத்தை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் பக்தர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 450 டன் எடை கொண்ட தேரை இரும்பு சங்கிலியால் இழுப்பது கடினம் என்றும் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்