நசுங்கி வரும் நடுத்தர மக்கள்!
அனைத்து பொருட்களின் விற்பனையிலும் நடுத்தர மக்களின் பங்கு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது.;
சென்னை,
சமுதாயத்தில் மேல் தட்டு மக்கள், நடுத்தர மக்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் என 3 பிரிவினர் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அரசாங்கமோ, மாநில அரசுகளோ பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளாலும் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். இந்தியாவில் மொத்த மக்கள்தொகையான 145 கோடியில் நடுத்தர வர்க்கத்தினர் 57 கோடி பேர் இருக்கிறார்கள். அதாவது, 38 சதவீதம் பேர் நடுத்தர மக்கள்தான். ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.36 லட்சம் வரை பெறுபவர்கள் இந்த பட்டியலில் வருகிறார்கள்.
விலைவாசி உயர்வு என்றாலும் சரி, வரி வரம்புக்குள் சிக்குவது என்றாலும் சரி அதிகம் நசுக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். மேல்தட்டு மக்களுக்கு நல்ல வருவாய் கிடைப்பதால், அவர்களுக்கு இதன் தாக்கம் தெரியாது. அடித்தட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் இலவச அரிசி, இலவச உதவித்தொகை, இலவச வீடு, இலவச மின்சாரம் என்பது போன்ற பல சலுகைகள் கிடைப்பதால் அவர்களுக்கும் வலி தெரியாது. ஆனால், நடுத்தர மக்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் விலைவாசி உயர்ந்தாலும், வரியின் தாக்கத்தினாலும் அவதிப்படுகிறார்கள்.
அனைத்து பொருட்களின் விற்பனையிலும் நடுத்தர மக்களின் பங்கு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது. சில பொருட்கள் ஆடம்பர பொருட்கள் என்ற பட்டியலில் இருந்தாலும், அந்த பொருட்களை நடுத்தர குடும்பங்கள் கடன் வாங்கியாவது வாங்க வேண்டியநிலை ஏற்படும். தற்போது வந்துள்ள ஆய்வின்படி, விலைவாசி கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.2 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காய்கறி விலை 57 மாதங்களில் இல்லாத அளவு 42.2 சதவீதம் உயர்ந்துவிட்டது. இதுபோல, மளிகை பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, போக்குவரத்து செலவு உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு என்பதுபோல, பல உயர்வுகளால் நடுத்தர மக்கள் தங்கள் செலவுக்கு கூடுதலாக 30 சதவீதம் ஒதுக்க வேண்டியநிலை ஏற்படுகிறது.
இதனால், அவர்களின் புதிய வீட்டு கனவு, வாகனக் கனவு என்று ஒவ்வொன்றும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. நிறைய பேரின் சேமிப்பும் குறைந்துவிட்டது. முன்பு, பணத்தை சேமித்த பிறகு, அதைக்கொண்டு தேவையான பொருட்களை வாங்குவார்கள். இப்போது, கடனுக்கு பொருட்களை வாங்கிவிட்டு, வட்டியுடன் மாதத்தவணைகளில் அந்த கடனை அடைப்பதற்கே வருமானத்தில் பெருந்தொகை ஒதுக்க வேண்டியுள்ளதால், செலவுக்கே பணம் இருப்பதில்லை. பிறகு எங்கே சேமிக்க பணம் இருக்கும்? அரசாங்கத்தின் மொத்த நேரடி மற்றும் மறைமுக வரிகளில் 35 சதவீதம் ஆண்டுக்கு ரூ.15 லட்சமும், அதற்கு மேலும் வருமானம் ஈட்டுபவர்களால்தான் கட்டப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய தூணாக இருக்கும் நடுத்தர மக்கள் வலியில்லாமல் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். இப்போது இருக்கும் ஜி.எஸ்.டி.யில் சீரமைப்பு, வருமான வரியில் இன்னும் சலுகை, பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி குறைப்பு, சேமிப்பு டெபாசிட்டுகள் மூலம் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி ரத்து போன்ற பல சலுகைகள் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அறிவிக்கப்படும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.