நல்லதொரு தொடக்கம்!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட பல ஆண்டுகளாக இருந்த நட்புறவு இப்போது மீண்டும் தழைக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-10-29 00:44 GMT

சென்னை,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட பல ஆண்டுகளாக இருந்த நட்புறவு இப்போது மீண்டும் தழைக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சரித்திர காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு, வர்த்தக உறவு, கலாசார உறவு இருந்ததற்கு வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. நெருங்கிய வர்த்தக உறவு இருந்திருப்பதற்கு இப்போது பல இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்படும் அடையாளங்கள் சாட்சி. நேரு பிரதமராக இருந்தபோது 1954-ல் சீனா சென்ற நேரத்திலும், சீனாவை சேர்ந்த தலைவர்கள் இந்தியா வந்த நேரத்திலும், "இந்தி - சீனா பாய்.. பாய்..", அதாவது "இந்தியாவும், சீனாவும் சகோதரர்கள்" என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. சீனாவில் நேருவை வரவேற்க சீன மக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றனர். சீன அதிபர் சூ என் லாய் 4 முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தார். பிறகு இருநாடுகளுக்கும் இடையே சில பல காரணங்களால் விரிசல் ஏற்பட்டது.

1982-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் நவம்பர் 20-ந் தேதி வரை நடந்த போர் இரு நாடுகளையும் எதிரி நாடுகளாக்கிவிட்டது. இந்த பகை இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லையிலும் புகைச்சலை ஏற்படுத்தியது. ஆசியாவில் இருபெரும் சக்திகளாக விளங்கும் இந்தியாவும், சீனாவும் மோதிக்கொள்வது இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2019-ல் சீன அதிபர் ஜின்பிங் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்துக்கு வந்ததும், அங்கு பிரதமர் நரேந்திரமோடியுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தியதும் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது.

ஆனால், 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் மீண்டும் பிரச்சினையை தலைதூக்க வைத்தது. இந்த நிலையில், கடந்த 23-ந் தேதி ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியது உலகத்தையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இந்த பேச்சுவார்த்தை, ஏதோ கூடினோம்.. பேசினோம்.. கலைந்தோம்.. என்று இல்லாமல், நட்புறவை புதுப்பிக்கும் பேச்சுவார்த்தையாக இருந்தது. இரு நாட்டு எல்லைகளிலுமே அமைதி நிலவ வேண்டும் என்பதே இந்த பேச்சுவார்த்தையின் கருப்பொருளாக இருந்தது.

இரு தலைவர்களுமே புதிய உறவுக்கு வழிகாணும் வகையிலேயே கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக கிழக்கு லடாக் பகுதியில் உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதியில் இரு நாட்டு படைகளையும், தளவாடங்களையும் பின்வாங்கும் பணிகளும் அங்கு வீரர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த கூடாரங்கள் உள்பட கட்டமைப்புகளை அகற்றும் பணியும் இப்போது வேகமாக நடந்து முடியும் தருவாயில் இருக்கிறது. அதற்கு பிறகு இருநாட்டு ராணுவ வீரர்களும் ஒருங்கிணைந்து ரோந்து பணியை மேற்கொள்வார்கள். இதுவரையில் நிலவி வந்த பதற்ற நிலையை இது தணித்துள்ளது. இப்போது தொடங்கப்பட்டுள்ள படைவிலக்கல் வருங்காலங்களில் தொடர்ந்து நீடிக்க வேண்டும். தீபாவளியன்று எல்லையில் உள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் இனிப்பு கொடுப்பதுபோல, இந்த தீபாவளி நாளன்று சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்கள் இனிப்பு கொடுத்து நல்லுறவை இன்னும் பலப்படுத்துவோம். இரு நாடுகளுக்கு இடையே உருவாகியுள்ள நல்லதொரு தொடக்கம் இரு நாட்டு வளர்ச்சிக்குமே வழி வகுக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்