கொல்கத்தா டாக்டர் வழக்கு: திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் சி.பி.ஐ. விசாரணை
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த மாதம் 9-ந்தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதனிடையே, கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. சுதிப்தோ ராயிடம் வடக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுதிப்தோ ராய்க்கு சொந்தமான முதியோர் இல்லத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவமனையின் நோயாளிகள் நலக்குழு தலைவராக சுதிப்தோ ராய் பதவி வகித்து வருகிறார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் எனவும், இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு தெரிந்த விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.