ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் நிறைவு; 58.85 சதவீத வாக்குகள் பதிவு
ஜம்மு காஷ்மீரில் முதற் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் 24 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை முதலே ஓட்டுப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடந்து முடிந்தது. இரவு 7.30 மணி நிலவரப்படி 58.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் முதற் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. புல்வாமாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 58.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக இந்தர்வாலில் 80.06 சதவீதமும் குறைந்தபட்சமாக ட்ரால் பகுதியில் 40.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் :-
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தியின் மகளுமான இல்டிஜா, அனந்த்நாக் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
ஜம்மு காஷ்மீர்: கிஷ்த்வாரில் உள்ள பக்வான் மொஹல்லாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்களை அடையாளம் காண்பது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
கிரிஷ்ட்வர் தொகுதி பாஜக வேட்பாளர் ஷகன் பரிகர் தனது வாக்கை பதிவு செய்தார்
காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்:-
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் கந்தர்பால் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "இந்த தேர்தல் மிகவும் நல்ல விஷயம். மக்கள் தேசிய மாநாட்டிற்கு வாக்களிக்க வேண்டும், ஏனெனில் இது ஜம்மு காஷ்மீருக்கு பயனளிக்கும். நான் சிலரிடம் பேசினேன், தேசிய மாநாட்டு கட்சி அனைத்து பிரிவினரிடமும் அதிக வாக்குகளை பெறுகிறது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 10 வருடங்களாக இந்த நாளுக்காக காத்திருக்கிறோம். அக்டோபர் 8ம் தேதிக்காக காத்திருப்போம், ஆனால் இதுவரை வந்த தகவல்கள் நன்றாகவே உள்ளன" என்றார்.