இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும்; ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி

நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் உற்பத்தியில் தரம் மற்றும் வாழ்வில் தரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Update: 2024-07-11 17:28 GMT

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில், 2022-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகள் 181 பேருடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார். அவர்கள் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளை சேர்ந்த உதவி செயலாளர்கள் பணியில் இணைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங், பிரதம மந்திரியின் முதன்மை செயலாளர் பி.கே. மிஷ்ரா, கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா, உள்துறை மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் துறையின் செயலாளர் ஏ.கே. பல்லா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, பல்வேறு அதிகாரிகளும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளுடன் நடந்த உரையாடல் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தது.

இந்தியாவின் வளர்ச்சிக்கான பாதைக்கு பங்காற்றுவதற்கான வழிகளை காணும்படி வலியுறுத்தியதுடன், நம்முடைய மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான வேறுபாட்டை கொண்டு வரும்படியும் கேட்டு கொண்டேன் என பதிவிட்டு உள்ளார்.

இதுபற்றி பிரதமர் மோடி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், புதிய இந்தியாவானது, அரைமனதுடன் அணுகுதலோடு திருப்தியடைவதில்லை. செயல்திறனுடன் செயல்பட வேண்டும். சிறந்த சாத்தியப்பட்ட நிர்வாகம் தருவதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் உற்பத்தியில் தரம் மற்றும் வாழ்வில் தரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி அவர்களிடம் தெரிவித்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்