டெஹ்ரா தொகுதி இடைத்தேர்தல்: இமாச்சல பிரதேச முதல்-மந்திரியின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி

இடைத் தேர்தலில் இமாச்சல பிரதேச முதல்-மந்திரியின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.;

Update:2024-07-13 14:44 IST

சிம்லா,

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதன்படி இமாச்சலப் பிரதேசம் மாநிலம், டெஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த புதன்கிழமை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்று தொகுதி இடைத்தேர்தல்களிலும் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சுமார் 71 சதவீதம். அதில் அதிகபட்சமாக நலகரில் 78.1 சதவீத வாக்குகள் பதிவாகின, அதைத் தொடர்ந்து ஹமீர்பூரில் 67.1 சதவீதமும், டெஹ்ராவில் 65.2 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் வெற்றி பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவு செய்யப்பட்டது, அங்கு ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இன்று காலை தொடங்கிய மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா வேட்பாளர் ஹோஷியார் சிங், கமலேஷ் தாக்கூரை விட 557 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த கமலேஷ் தாக்கூர், இறுதிச்சுற்று எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா வேட்பாளர் ஹோஷியார் சிங்கைவிட 9,399 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்த மூன்று சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்களான சிங் (டெஹ்ரா), சர்மா (ஹமிர்பூர்) மற்றும் கே.எல். தாக்கூர் (நலகர்) ஆகியோர் மார்ச் மாதம் தங்களது பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டு, மூன்று தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் அவர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.

இதையடுத்து மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம். பாஜகவில் இணைந்த மூன்று முன்னாள் எம்எல்ஏக்களும் அந்தந்த தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்தது. காங்கிரஸ் சார்பில் டெஹ்ரா தொகுதியில் இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர், ஹமிர்பூரில் புஷ்பிந்தர் வர்மா மற்றும் நலகர் தொகுதியில் ஐந்து முறை இந்திய தேசிய காங்கிரசின் தொழிற்சங்க தலைவரான ஹர்தீப் சிங் பாபா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நடைபெற்ற 3 தொகுதி இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் இரண்டு இடங்கள் மற்றும் பா.ஜனதா ஒரு இடத்தில் என முன்னிலையில் உள்ளது. டெஹ்ரா தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரியின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். 32 ஆயிரத்து 737 வாக்குகள் பெற்ற அவர் 9 ஆயிரத்து 399 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹோஷ்யர் சிங் 23 ஆயிரத்து 338 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்