அவசர நிலையின்போது சிறையில் இருந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம்- ஒடிசா அரசு
அவசர நிலையின்போது சிறையில் இருந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.;
புவனேஸ்வரம்,
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலை 1977-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி வரை நீடித்தது. இந்த காலக்கட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவ்வாறு ஒடிசா மாநிலத்தில் சிறையில் இருந்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அந்த மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அவசர நிலையின்போது சிறையில் அடைக்கப்பட்டு இன்னல்களை அனுபவித்த அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும் அவர்கள் இலவச மருத்துவ சிகிச்சையும் பெறலாம். இந்த திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு அவர்கள் சிறையில் இருந்த கால அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல், சிறைப்பட்டு 1-1-2025 அன்றை தேதியில் உயிருடன் இருப்பவர்கள் அனவைருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.