ஜம்மு-காஷ்மீர்: கண்ணிவெடி வெடித்து ராணுவ வீரர்கள் 6 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் கண்ணிவெடி வெடித்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர்.;
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மாவட்டம் நவ்ஷிரா பகுதியில் சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் இன்று காலை 11 மணியளவில் வழக்கமான ரோந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, எல்லைப்பகுதியில் ராணுவ வீரர் எதிர்பாராத விதமாக கண்ணிவெடியில் மிதித்தார்.
இதனால், கண்ணிவெடி வெடித்தது. இந்த சம்பவத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக, ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்க எல்லையில் பாதுகாப்புப்படையினர் கண்ணிவெடிகளை புதைத்து வைப்பது வழக்கம். அவற்றில் சில கண்ணிவெடிகள் மழை காரணமாக வேறுஇடங்களுக்கு அடித்து வரப்படுகிறது.
ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் இந்த கண்ணிவெடிகள் மீது எதிர்பாராத விதமாக மிதிப்பதால் அது வெடித்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.