உரிய ஆவணங்களின்றி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீனர் கைது
உரிய ஆவணங்களின்றி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீனர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
லக்னோ,
நேபாள நாட்டின் எல்லையில் உத்தரபிரதேச மாநிலம் அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டம் சவுனாலி பகுதியில் இந்தியா-நேபாள எல்லை அமைந்துள்ளது.
இந்த எல்லைப்பகுதியில் இன்று எல்லைப்பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற நபரிடம் பாதுகாப்புப்படையினர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த நபரின் பெயர் பெங் மின்ஹுய் (வயது 35) என்பதும் அவர் சீனாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்தியாவிற்குள் நுழைய தேவையான விசா உள்பட எந்தவித ஆவணங்களும் பெங் மின்ஹுயிடம் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த பாதுகாப்புப்படையினர் இது குறித்து புலனாய்வுத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சீனரான பெங் மின்ஹுயிடம் சீன பாஸ்போர்ட்டு, சீன பணமும் இருந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.