நீட் தேர்வு முறைகேடு: சிபிஐ வழக்குப்பதிவு
நீட் தேர்வு முறைகேடு சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
டெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது.
இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 6 தேர்வு மையங்களில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 67 மாணவ-மாணவிகள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். இதில் 6 பேர் அரியானாவின் பரிதாபாத் நகரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்தது. இதனால், நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும், ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.
அதேவேளை, நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டது. வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நீட் தேர்வு நடைபெற்ற மே 5ம் தேதி அன்று சிகந்தர் யாதவேந்து, நீட் தேர்வு எழுதிய ஆயூஷ் ராஜ் என்ற மாணவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் மே 6ம் தேதி மொத்தம் 13 பேரை பீகார் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது நடவடிக்கை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனை தொடர்ந்து பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கான நெட் தேர்விலும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமாரை மத்திய அரசு நேற்று பணியில் இருந்து நீக்கியது. அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்திய வர்த்தக மேம்பாட்டு தலைவருமான பிரதீப் சிங் கரோலியாவுக்கு தேசிய தேர்வு முகமை தலைவர் பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ மேற்படிப்புக்கான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ படிப்புகளை படிக்க இயலும். இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதை அடுத்து முதுநிலை நீட் தேர்வு முறைகேடு நடைபெறலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் இன்று நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.