உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை கைவிட்டது மத்திய அரசு

நேரடி நியமன முறை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் உருவானது என்று பா.ஜ.க. பதில் அளித்தது.

Update: 2024-08-20 08:40 GMT

புதுடெல்லி:

மத்திய அரசுத் துறைகளில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டிருந்தது.

இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சமூகநீதி மீதான தாக்குதல் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் உயர்பதவிகளில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை நேரடியாக நியமிக்கும் முறையில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அதனால், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு இந்த பதவிகள் கிடைக்காத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே பல்வேறு நிலையிலான பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளும் பாதிக்கப்படும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார்.

ஆனால், அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளில் வல்லுனர்களை நேரடியாக நியமிக்கும் முறை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் உருவானது என்று பா.ஜ.க. சுட்டிக்காட்டி விளக்கம் அளித்தது.

எனினும், பரவலான விமர்சனங்களும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், அந்த முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யும்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி உள்ளார். சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் கூறியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்