அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி

டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்ய உள்ளதால் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-09-17 06:06 GMT

டெல்லி,


Live Updates
2024-09-17 11:42 GMT

ஆட்சி அமைக்க உரிமைகோரினார் அதிஷி

டெல்லியின் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லியில் நீர்வளத்துறை உள்பட 14 துறைகளை கவனித்து வரும் அதிஷியை டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்திருக்கிறார்.

அதன் பேரில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அதிஷி டெல்லி புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த சூழலில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆம் ஆத்மி சட்டசபை தலைவராக தேர்வான அதிஷி டெல்லியில் புதிய அரசு அமைக்க உரிமை கோரினார். கெஜ்ரிவாலுடன் துணை நிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அதிஷி உரிமை கோரியுள்ளார்.

இதன்படி டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி மர்லெனா (43) பதவியேற்க உள்ளார்.

2024-09-17 11:31 GMT

டெல்லி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 26ம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்தது. இதனிடையே, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும். சி.பி.ஐ கைது செய்ததன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே இருந்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ கைது செய்த வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. பல்வேறு நிபந்தனைகள் விதித்து சுப்ரீம்கோர்ட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதன் பேரில், கடந்த 13ம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடைபெறும் மராட்டிய தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லியில் நீர்வளத்துறை உள்பட 14 துறைகளை கவனித்து வரும் அதிஷியை டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2024-09-17 11:26 GMT
டெல்லி முதல் மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.துணை நிலை ஆளுநரை சந்தித்து கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதல் மந்திரியாக  தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அதிஷி,  கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். 
2024-09-17 10:28 GMT

முதல் மந்திரியை மாற்றுவதில் எந்த பிரயோஜனம் இல்லை என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்தர் சச்தேவ் கூறினார். கெஜ்ரிவாலின் 10 ஆண்டு கால ஊழலை வைத்து பார்க்கும் போது, யாரை முதல் மந்திரியாக நியமித்தாலும் அவர்கள் தாங்கள் செய்த ஊழலுக்கு மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் சச்தேவ் கூறினார். 

2024-09-17 07:24 GMT

மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்குச் சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். அடுத்த டெல்லி முதல்-மந்திரி யார் என்பதில் சஸ்பென்ஸ் இருந்த நிலையில், டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின் டெல்லியின் புதிய புதல்-மந்திரியாக அதிஷி பதவி ஏற்க உள்ளார். அவரது பின்னணி குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

கடந்த 1981ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான விஜய் சிங் மற்றும் திரிப்தா வாஹி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் அதிஷி. பஞ்சாபி மற்றும் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, அவரது பெற்றோர் அதிஷி மர்லினா சிங் என்று பெயர் வைத்தனர். மார்க்ஸ் மற்றும் லெனினின் பெயர்களை இணைத்தே அவரது பெற்றோர் மர்லினா என்று வைத்துள்ளனர். இருப்பினும், சில காரணங்களால் அவர் 2018 முதல் மர்லினா பெயரைப் பயன்படுத்துவதில்லை. அதிஷி என்பதை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

அதிஷி டெல்லியில் பிறந்து வளர்ந்தார். டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த அவர், கடந்த 2001-ம் ஆண்டில், டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவருக்கு ஸ்காலர்ஷிப்பும் கிடைத்துள்ளது. 2003-ல் வரலாற்றில் அவர் முதுகலைப் படிப்பை முடித்தார். பிறகு அவர் ரோட்ஸ் அறிஞராக, 2005-ல் ஆக்ஸ்போர்டில் உள்ள மாக்டலன் கல்லூரியில் சேர்ந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அதிஷி, கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் மிக முக்கிய பங்காற்றினார். குறிப்பாக டெல்லியில் கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் அவர் மிக முக்கிய பங்கு வகித்தார். 2015-ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின்​​ துணை முதல்-மந்திரியும் கல்வி மந்திரியான மணிஷ் சிசோடியாவின் ஆலோசகராக அதிஷி நியமிக்கப்பட்டார்.

டெல்லியின் கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததில் அதிஷி மிக முக்கிய பங்கு ஆற்றி உள்ளார். டெல்லி அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தல், தனியார்ப் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவது எனப் பல முக்கிய திட்டங்களைக் கொண்டு வந்த பெருமை அதிஷியை சேரும்.

தற்போது நிதி மந்திரியாக உள்ள அதிஷி நிதி, திட்டமிடல், பொதுப்பணித்துறை, நீர், மின்சாரம், கல்வி, உயர்கல்வி, சேவைகள், மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய துறைகளைக் கவனித்து வருகிறார். சுமார் 11 இலாகாக்கள் அவருக்குக் கீழ் வருகிறது. டெல்லியில் வேறு எந்தவொரு மந்திரியிடமும் இத்தனை இலாகாக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் அவர் கடந்தாண்டுதான் மந்திரியாக பதவியேற்றார். கடந்தாண்டு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் அதிஷிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அவரது செயல்பாடு மிக சிறப்பாக இருந்ததாலேயே பல துறைகள் அவருக்கு வழங்கப்பட்டது. கெஜ்ரிவால் சிறையில் இருந்த நிலையில், சுதந்திர தின நிகழ்ச்சியின் போது அவருக்குப் பதிலாக அதிஷிதான் தேசியக் கொடியையும் ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ல் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் அதிஷி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அதிஷி 55,897 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் அவர் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் தரம்பிரை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.

2024-09-17 07:00 GMT

டெல்லியின் 3வது பெண் முதல்-மந்திரி அதிஷி

டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் டெல்லியின் 3வது பெண் முதல்-மந்திரி என்ற பெருமையை அதிஷி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ்1998ம் ஆண்டு டெல்லி முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரசை சேர்ந்த ஷீலா தீக்சித் 1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் டெல்லி முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்.

சுஷ்மா சுவராஜ், ஷீலா தீக்சித்தை தொடர்ந்து டெல்லியின் 3வது பெண் முதல்-மந்திரியாக ஆம் ஆத்மியை சேர்ந்த அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

2024-09-17 06:44 GMT

டெல்லியில் புதிய முதல்-மந்திரியாக அதிஷியை, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக தேர்வு செய்துள்ளனர்.

2024-09-17 06:15 GMT

டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி?

டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி எல்.எல்.ஏ. கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய முதல்-மந்திரியாக அதிஷியின் பெயரை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார்.

டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்றுநேரத்தில்  வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி டெல்லி கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024-09-17 06:07 GMT

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்:

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை, சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிபிஐ பதிவு செய்த வழக்கிலும் கெஜ்ரிவாலுக்கு கடந்த 13ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை செயலகத்திற்கு செல்லக்கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என நிபந்தனை விதித்தது. இதையடுத்து 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அன்று (13ம் தேதி) மாலை திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.

இதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி ஆம் ஆத்மி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியை 48 மணிநேரத்தில் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தன்னை மக்கள் நேர்மையானவன் என்று சொல்லும்வரை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டேன் என்றும் கூறினார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறினார்.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்ய உள்ளார். அவர் டெல்லி கவர்னரை இன்று மாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவு அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்